நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி நியமிக்கப்பட்டுள்லார். தேர்தல் பணி தொடர்பாக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அஃப்னா பார்க்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற நான்கு மாத காலத்தில் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டுவருகிறது. 2.10 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி ரூபாய் நான்காயிரம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பெண்களுக்கு பேருந்தில் கட்டணம் இல்லா பயணம் என்று முதல்வர் அறிவித்து அதில் வெற்றி கண்டுள்ளார்.
தமிழகத்தில் 503 கோடி பயிர்க் கடன் தரிசு நிலத்திற்காக கடனாக வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டத்தில் ஒரே நபர் 2.42 கிலோ நகைகளை அடகு வைத்து 384 நகைக் கடன் மூலமாக 72.39 லட்சம் கடன் பெற்று மோசடி செய்துள்ளார். மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கடந்த மூன்று மாதங்களாக தரமான அரிசி வழங்கப்பட்டுவருகிறது. விவசாய பயிர்க்கடன் ரூபாய் 2,393 கோடிக்கும் மேலாக நிலத்தின் அளவிற்கு கூடுதலாக கடந்த அதிமுக அரசு வழங்கியுள்ளது. அதுபோன்று கூட்டுறவு சங்கங்களில் தங்க நகைகளை அடகு வைக்காமல் போலி நகைகள் மூலம் கடன் பெற்றுள்ளனர். போலியான ஆவணங்களை சமர்ப்பித்து நகைக்கடன் பெற்றுள்ளனர். அந்நியோதி, அன்னயோஜனா திட்டத்தின் அட்டையை வைத்தும் அதில் முறைகேடு நடந்துள்ளது.
தமிழக அளவில் கூட்டுறவு சங்கங்களில் கடந்த ஆட்சியில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. தமிழக முதல்வர் ஆட்சியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும். கட்சித் தொண்டர்கள் தவறு செய்தாலே கடுமையான நடவடிக்கை எடுக்கும் முதல்வர் ஆட்சியில், தேர்தல் நேர்மையாக நடத்தப்படும். அதேபோல் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தமிழக முதல்வர் நான்கு மாத கால ஆட்சியில் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். எனவே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றிபெறும்” என தெரிவித்தார்.