சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று (11/07/2022) காலை 09.00 மணிக்கு அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தப் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என ஒ.பி.எஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணைகள் முடிந்து இன்று காலை 9 மணிக்கு நீதிமன்றம் பொதுக்குழுவிற்கு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது.
இதில் முன்னதாக பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, “தூய உள்ளம் படைத்தவருக்குத்தான் இறைவன் அருள்வான்; வஞ்சகனுக்கு இறைவன் தூரத்திலிருந்து கவனித்துக்கொண்டிருப்பான்” என வள்ளலாரின் பாடலை மேற்கோள் காட்டி ஓ.பி.எஸ் குறித்து பேசினார்.
இந்நிலையில் அவரைத் தொடர்ந்து, 16 தீமானங்களில் முதல் எட்டு தீர்மானங்களை பட்டியலிட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார். “அண்டை நாட்டிலே ஒரு புரட்சி அது மக்கள் புரட்சி. அந்த உணர்வுகளை நாம் பார்த்தோம். தமிழ்நாட்டில் தொண்டர்கள் புரட்சி. இது எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக வேண்டும் என்று நடந்தது. அதிமுக மூன்றாவது தலைமுறைக்கு தலைமை அடையாளம் காட்டுகிறது. எம்.ஜி.ஆர். ஐந்து, பத்து நிமிடங்களில் ஐம்பது, நூறு தொண்டர்களைச் சந்தித்து அவர்களை மகிழ்ச்சி படுத்துவார். ஆனால், ஐந்து, பத்து நிமிடங்களில் ஐந்நூறு தொண்டர்களைச் சந்தித்து மகிழ்ச்சிப்படுத்துபவர் எடப்பாடி பழனிசாமி. இராமாயணத்தில் இராமனுக்கு மகுடம் சூட்டும்போது, அவருடன் இருந்த லட்சுமணன் அவரின் தியாகத்தால், சேவையால் தியாக வரலாற்றில் இடம் பிடித்தார். இன்று இராமனாக எடப்பாடி பழனிசாமிக்கு மகுடம் சூட்டும்போது லட்சுமணனை காணவில்லை என்று கலங்க வேண்டாம். ஒன்றரைக் கோடி தொண்டர்கள் லட்சுமணனாக எடப்பாடியுடன் இருக்கிறார்கள்.
கட்டப்பொம்மன் பிறந்த மண்ணிலேயே தான் எட்டப்பனும் பிறக்கிறான். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கனவுகளை நினைவாக்க தன்னை அர்ப்பணித்தவர் எடப்பாடி. எதிர்த்து நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சூராதி சூரனாக இருந்தாலும்; அவரை கையெடுத்து வணங்கமாட்டேன் என்ற கொள்கையோடு இருக்கும் ஒரு தலைவர் எடப்பாடி பழனிசாமி.