மகாராஷ்டிராவில் அகில இந்திய இந்துத்துவாக் கட்சியான பா.ஜ.க.வுக்கு, மாநில இந்துத்துவாக் கட்சியான சிவசேனா அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் தொடங்கியிருப்பதாக சொல்கின்றனர். மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வோடு கைகோத்திருந்த சிவசேனா, அங்கு ஏற்பட்ட குழப்படியான அரசியல் நிலவரங்களால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸின் ஆதரவோடு, குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் ஆட்சியில் அமர்ந்திருக்கு என்கின்றனர். துணை முதல்வர் யார் என்பதைக் கூட திங்கட்கிழமை வரை முடிவுசெய்ய முடியாத நிலை இருந்தாலும் முதல்வர் பொறுப்பேற்றிருக்கும் உத்தவ் தாக்கரே, பதவியில் அமர்ந்ததுமே பா.ஜக.வுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கும் வகையில், நீதிபதி லோயா விவகாரம் விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதற்கான அமித்ஷா தொடர்புடைய சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி லோயாவின் மர்ம மரணம் குறித்த ஃபைலைத் தூசு தட்டி எடுக்கச் சொல்லியிருக்கிறார். அது அவர் மேஜைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அமித்ஷா சம்பந்தப்பட்ட போலி என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்தவரான நீதிபதி லோயா, விருந்து ஒன்றில் கலந்து கொண்ட போது, அவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். அப்போதே அவரது மரணத்தில் பலமாக சந்தேகம் கிளப்பப்பட்டது. இதை விசாரிக்கும்படி எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. இந்த நிலையில்தான் இப்போது மீண்டும் அந்த ஃபைலை கையில் எடுத்திருக்கிறார் முதல்வர் உத்தவ் தாக்கரே. அதேபோல் முன்னாள் பா.ஜ.க. முதல்வர் பட்னாவிஸிற்கு எதிரான ஊழல் புகார்களையும் எடுக்கச் சொல்லியிருக்கிறார் உத்தவ், இதனால் பாஜக கட்சியினர் அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.