Skip to main content

“ஆளுநர் நீதிமன்றத்தில் குட்டுப்படுவார்” - திமுக கண்டனம்

Published on 29/06/2023 | Edited on 29/06/2023

 

 'Governor will be caught in court'- DMK condemns

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார்.

 

தொடர்ந்து அவர் வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உள்ளிட்ட இலாகாக்கள் மற்ற இரு அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம், வேலைக்கு பணம் பெற்றதாக வழக்குகள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக தமிழக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 'தற்போது அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளார். செந்தில் பாலாஜி இனியும் அமைச்சராக நீடித்தால் விசாரணை பாதிக்கப்படும் என்பதால் அவர் நீக்கப்பட்டுள்ளார். அவர் மீது உள்ள கிரிமினல் வழக்கு தொடர்பாக நீதிமன்ற காவலில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

nn

 

இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''ஆளுநர் ஆர்.என்.ரவி செய்திருப்பது அரசியல் ரீதியான முடிவு. தொடர்ந்து ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். ஆர்.எஸ்.எஸ் தொண்டர் போல ஆளுநர் செயல்படுகிறார். ஒரு அமைச்சரை நீக்கவோ சேர்க்கவோ முதலமைச்சரால் மட்டும் தான் முடியும். தற்போது ஒரு அமைச்சரை நீக்கியுள்ள ஆளுநரால் ஒருவரை அமைச்சராக சேர்க்க முடியுமா? ஆளுநர் தனது செயலுக்காக நீதிமன்றத்தில் குட்டுப்படுவார்” எனத் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. ஆளுநர் அறிவிப்பை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்' என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்