மீண்டும் பற்றியெறிகிறது பாலஸ்தீனம்! உலகம் மத்திய கிழக்கை நோக்கி திரும்பியிருக்கிறது!
ராக்கெட் வீச்சுகள், விமானத் தாக்குதல்கள், கல்லெறி சம்பவங்கள், துப்பாக்கிச் சூடுகள், உயிர் பலிகள், படுகாயங்களுடன் கண்ணீர் குரல்கள் என எங்கும் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. ரத்தத்தில் அவர்களின் வரலாறு எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது.
நூற்றாண்டுகளைக் கடந்தும் போர்களின் வழியே வாழ்க்கையை நடத்தும் பாலஸ்தீனியர்களின் தியாகங்கள் உணர்ச்சிகரமானவை. ஒரு இயக்கத்தையோ, தலைவரையோ நம்பியிராமல்; மக்களே ராணுவமாக இயங்குகிறார்கள்.
தாய்பாலின் வழியே விடுதலை உணர்வு ஊட்டப்படுகிறது. அவர்களது விடுதலை போர்கள்; வெற்றி, தோல்விகளைக் கடந்து நீள்கிறது. உலகில் எந்த ஒரு இனமும் இவ்வளவு அடக்குமுறைகளைக் கடந்து பயணிக்கவில்லை என்பதே வரலாற்று உண்மையாகும்.
உலகில் பல விடுதலை போராட்டங்கள் தோல்வியில் முடிந்திருப்பதையும், பாதியில் நீர்த்துபோய் விடுவதையும், அரசியல் சூழ்ச்சிகளில் அழிந்து போய் விடுவதையும் வரலாறுகளில் பார்க்கிறோம்.
பாலஸ்தீனம் இதில் மாறுபட்டே நிற்கிறது.
சொந்த மண்ணில் தங்களை அகதிகளாக்கிய வல்லரசுகளின் சூழ்ச்சிகளை எதிர்த்து; வலிமைமிக்க புத்தம்புது ஆயுதங்களை தகர்த்தெறிந்து; தங்கள் வீரத்தை சமரசமின்றி வெளிக்காட்டும் அவர்களின் போர் தியாகங்கள் வரலாறு மெச்சுபவை.
பதுங்கி பயிற்சி செய்ய காடுகள் இல்லை. முகாம்கள் அமைத்திட பரந்து விரிந்த நிலம் இல்லை. வெயிலும், அனலும் வீசும் பாலைவனத்தில் அவர்கள் தங்களைப் போராளிகளாக உருவாக்கிக்கொள்கிறார்கள். பிறக்கும்போதே குழந்தைகளுக்கு விடுதலை உணர்வு ஊட்டி வளர்க்கப்படுவதால், தலைமுறைகளைத் தாண்டியும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர் அங்கே தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இதன் நீண்ட நெடிய வரலாற்றை புத்தகங்களிலேயே வாசிக்க முடியும். அந்த புத்தகங்கள் நமக்கு கிளர்ச்சியூட்டுபவை. இக்கட்டுரையில் அவற்றை சுருக்கமாக தருகிறோம்.
சிலுவை யுத்தங்களுக்குப் பிறகு பாலஸ்தீனம் துருக்கிய கிலாஃபத் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது. முதல் உலகப்போரில் துருக்கி நாடு; ஜெர்மனி, தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவித்தது. அதனால் போர் வெற்றிக்குப் பிறகு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் துருக்கிய சாம்ராஜ்யத்தை வீழ்த்தின.
தங்களது பழிவாங்கும் திட்டத்தின்படி பலஸ்தீனத்தை சிதைப்பதை நீண்ட நாள் திட்டமாக கையிலெடுத்துக்கொண்டனர். வளைகுடாவில் அமைதியைக் குலைத்து; அப்பகுதியை தொடர் பதட்டத்தில் வைப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
வளைகுடா நாடுகளில் 1930களுக்குப் பின்னர் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, ஆகியன அபரிதமாக இருப்பதாக கண்டறியப்பட்டதும் ஐரோப்பிய வல்லரசுகள் விழித்துக்கொண்டன. வளைகுடாவின் எதிர்கால அரசியலையும், சட்டம் ஒழுங்கையும் தங்கள் விருப்பப்படி வழிநடத்திட திட்டமிட்டன.
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானிய யூதர்கள் ஜெர்மனிக்கு எதிராக துரோகிகளாக செயல்பட்டு வந்ததை அமெரிக்காவும் பிரிட்டனும் சரியாக பயன்படுத்திக்கொண்டன.
துரோகத்திற்கு பரிசாக யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் அவர்கள் விருப்பப்படி ஒரு நாடு உருவாக்கி கொடுப்பதாக வாக்குறுதி அளித்தன.
இவற்றின் அடிப்படையிலேயே 1948இல் பாலஸ்தீம் பிரிக்கப்பட்டு இஸ்ரேல் என்ற யூத நாடு உருவாக்கப்பட்டது. இஸ்ரேலுக்காக திருடப்பட்டது போக, மீதிப் பகுதி ஜோர்டான் என்ற பெயரில் ஒரு நாடும் உருவாக்கப்பட்டது.
இதற்காக யூதர்கள் போட்ட சதித்திட்டங்கள் ஆச்சர்யங்கள் நிறைந்தவை.
1869களில் யூத சக்திகள் பாலஸ்தீனத்தில் யூதர்கள் வசிக்க நிலங்களை வாங்க ஒரு வங்கியை உருவாக்கினார்கள். தியோடர் ஹெஸில் என்பவர் யூதர்களுக்கான (ஸியோனிஸ) நச்சுக் கொள்கையை வடிவமைத்தார்.
இவற்றை செயல்படுத்த 1897 ஆகஸ்ட் மாதத்தில் சுவிட்சர்லாந்தில் யூத பிரதிநிதிகள் பங்கேற்ற ஒரு 'குட்டி'மாநாடு நடைபெற்றது. இந்தப் பின்னணிகளின் வழியேதான் வல்லரசுகளின் 'டெஸ்ட் ட்யூப் பேபி' யான இஸ்ரேல் உருவாக்கப்பட்டது என்பதை அறிய வேண்டும்.
முதல் உலகப்போருக்கு பின்பு 1922இல் சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பு (அதாவது ஐநா சபைக்கு முந்தைய அமைப்பு) யூதர்களுக்கு என ஒரு தனி நாட்டை பாலஸ்தீனத்தில் உருவாக்க கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தது.
அதன்படி ஐரோப்பிய கண்டத்தில் இருந்து யூதர்கள் படிப்படியாக பாலஸ்தீனத்தில் நிலங்களை வாங்கி குடியேறத் தொடங்கினர். இவர்களின் சூழ்ச்சிகளை பாலஸ்தீனர்கள் அறியாமல் போனதுதான் பரிதாபமாகும்!
பிரிட்டன், அமெரிக்கா நாடுகள் ஐரோப்பிய யூதர்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு 1947 நவம்பர் 29 இஸ்ரேல் நாடு உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
70 சதவீதம் கொண்ட பாலஸ்தீனர்களுக்கு 43% சதவீத நிலமும், 30 சதவீதமாக இருந்த குடியேறிய யூதர்களுக்கு 57% சதவீத நிலமும் என வஞ்சகமாக பிரிக்கப்பட்டது.
இதை பச்சையான துரோகம் என உலகம் குற்றஞ்சாட்டியது.
இந்தியாவின் சார்பில் தனது கடும் கண்டனத்தை காந்தியடிகள் வெளிப்படுத்தினார்.
பாலஸ்தீனர்கள் கொதித்தனர். தங்களுக்கான ஆதரவை அவர்கள் திரட்டுவதற்குள் 1948 மே 14 அன்று இஸ்ரேல் என்ற நாட்டை சியோனிஸ்டுகள் அதிகாரப்பூர்வமாக பிரகடனப்படுத்தினர்.
தங்கள் தாயகம் காக்க பாலஸ்தீனியர்கள் கிளர்ச்சி செய்தனர். அந்த ஒரு வாரத்தில் 13 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் தங்கள் மண்ணில் இஸ்ரேலிய படைகளால் கொன்று அழிக்கப்பட்டனர். அரபு பாலைவனம் சிவந்தது. அங்கிருந்து அடுத்த 3 மாதங்களில் 7 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் அகதிகளாக துரத்தியடிக்கப்பட்டார்கள்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் வஞ்சக உதவிகளால் இஸ்ரேல் தொடர்ந்து பாதுகாக்கப்பட; பாலஸ்தீனர்கள் தங்கள் ஆயுதம் சார்ந்த விடுதலை யுத்தங்களை தொடங்கினர். ஜோர்டான், எகிப்து, சிரியா, போன்ற நாடுகள் ஆரம்பத்தில் உதவிகள் செய்தன. காலப்போக்கில் அந்நாடுகளும் ஒதுங்கிக் கொண்டன. வட ஆப்பிரிக்கா மற்றும் மேற்காசியாவை சார்ந்த பல நாடுகள் தார்மீக ஆதரவோடு நின்றுக் கொண்டன.
1964இல் ஒருங்கிணைக்கப்பட்ட பலத்துடன் அகமது அல் சுக்ரி தலைமையில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் தொடங்கப்பட்டது. 1952இல் தொடங்கப்பட்ட அல்-பத்தா என்ற அமைப்பு இதில் இணைந்தது. இதன் நிறுவனர் பெயர் யாசர் அராபாத் ! ஆம், அவரே தான்!
1969இல் 'பாலைவனச் சிங்கம்' யாசர் அராபத் ஒருங்கிணைந்த PLO வின் தலைவர் ஆனதும் அவ்வியக்கம் வீரியம் பெற்றது.
சேகுவாராவுக்கு பிறகு உலக புரட்சியாளர்கள் கொண்டாடிய தலைவராக அவர் உயர்ந்தார். அவர் நடத்திய கொரில்லா யுத்தங்கள் இஸ்ரேலை நிலைகுலைய செய்தது. மண்ணுரிமைக்காக போராடிய உலக விடுதலை இயக்கங்கள் அவரைப் பின்பற்றத் தொடங்கின.
உலகம் எங்கும் நடைபெறும் விடுதலை போராட்டங்களுக்கு PLO ஆதரவு அளித்தது. தங்களை போலத்தானே அவர்களும், அவரவர் மண்ணுக்காக போராடுகிறார்கள் என்ற பரந்த நோக்கம் அவர்களை வழிநடத்தியது.
தமிழீழ போராட்ட அமைப்புகள் சிலவற்றுக்கு PLO ராணுவ பயிற்சி அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே 1980களில் ஹமாஸ் இயக்கம் ஷேக் அகமது யாசின் அவர்களால் தொடங்கப்பட்டது. இரு அமைப்புகளின் ராணுவ தாக்குதல்கள் மூலம் காஸா துண்டு நிலமும், ஜோர்டான் நதிக்கரைக்கு அருகிலுள்ள மேற்கு கரை பகுதியும் பாலஸ்தீனர்களின் கட்டுப்பாட்டிற்குள் மாறின.
இங்கும் சில வேதனைகள் தலை காட்டியது....
இலங்கையில் தமிழீழ குழுக்களுக்கிடையே சகோதர யுத்தம் நடைபெற்றது போல, பாலஸ்தீனத்தில் இவ்விரு இயக்கங்களும் மோதிக்கொண்டன.
காசாவில் ஹமாசும், மேற்கு கரையில் PLO வும் செல்வாக்குப் பெற்றன. ஆனால் யாசர் அராபத்தின் முதிர்ச்சியும், விரிந்த அரசியல் பார்வையும் பாலஸ்தீனத்திற்கான சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்தது என்பதே யதார்த்தமாகும்.
அவர் பாலஸ்தீனத்தில் முஸ்லிம்களையும், கிரித்தவர்களையும் பாலஸ்தீனர்கள் என்ற தேசிய இனத்தின் கீழ் சியோனிஸ்ட்டுகளுக்கு எதிராக அணிதிரட்டினார். இது அவரது சகோதரத்துவ - மதச்சார்பற்ற எண்ணத்தை வெளிக்காட்டியது. இது அவரது தலைமைத்துவ தரத்தை உயர்த்தியது.
உலகின் பல நாடுகளில் PLO அமைப்பு பாலஸ்தீனத்திற்கான தூதரகங்களை திறந்தது. இது உலகின் வேறு எந்த விடுதலை இயக்கங்களுக்கும் கிடைக்காத அங்கீகாரம் ஆகும்.
யாசர் அராபத்தை உலகம் பாலஸ்தீனத்தின் தலைவராக அங்கீகரித்தது. அவருக்கு இந்தியா சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது. அவருக்கு உலகம் அளித்த ஆதரவை தொடர்ந்து, ஐநா அவையில் உரையாற்ற யாசர் அராபாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் நியூயார்க் வர அவருக்கு அமெரிக்கா விசா மறுத்தது. அவருக்காகவே ஐநா ஏற்பாடு செய்த கூட்டம் ஜெனிவாவிற்கு மாற்றப்பட்டது. இது அவருக்கான வெற்றியாக உலகம் கொண்டாடியது.
அங்கு அவர் ஆற்றிய உரை அதிர்வலைகளை ஏற்படுத்தியது! பலர் கண்ணீர் விட்டனர்.
"ஆலிஃப் இலைகளோடு, அமைதிப் பூக்களை சுமந்துவரும் என் சமாதான முயற்சிகளின் சிறகுகளை உடைத்துவிடாதீர்கள்' என்று அவர் பேசியது உலகின் தலைப்பு செய்தியாக மாறியது.
அவரை விடுதலை போராளியாகவே பார்த்தவர்கள் அவரது ஜனநாயகப் பண்பையும், சமாதான அரசியலையும் பாராட்டினர்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் அவரை கொல்ல பல சதிகளை அரங்கேற்றின. அந்த முயற்சிகளை PLOவின் உளவுப்பிரிவு திறம்பட முறியடித்து வந்தது.
நீடித்த போர்களில் ஈடுபட்டு வந்த யாசர் அராபாத், உலகின் புதிய அரசியல் சூழலை உற்று நோக்கினார்.
1991இல் சோவியத் யூனியன் சிதறுண்டு; பனிப்போர் நின்று அமெரிக்கா மட்டுமே ஒற்றை வல்லரசாக உருவானது.
உலகின் அரசியல் போக்குகளை அவதானித்த PLO அமைப்பு பிடிவாதத்தை தளர்த்தி யதார்த்தத்தை நோக்கி நகர்ந்தது. குறைந்தபட்ச உரிமைகளுடன் கூடிய சுதந்திர பாலஸ்தீனத்தை ஏற்க முன் வந்தது. இது அரபுலகில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆனால் விமர்சிப்பவர்கள் களத்துக்கு வருவதில்லை. துணிச்சலாக உதவுவதும் இல்லை!
ராணுவ வலிமையற்ற அரபு நாடுகள் ஒருபுறம், இஸ்ரேலுடன் சமரசம் செய்துகொண்ட அண்டை நாடுகள் ஒருபுறம் என்ற பரிதாபகரமான சூழல் இருப்பதை யாசர் அராபாத் சிந்தித்தார்.
உலகின் ஆதரவோடு, தன் வாழ்நாளிலேயே ஒரு தாயகத்தை; அதிகாரப்பூர்வமாக தன் மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதே புத்திசாலித்தனம் என்பதை உணர்ந்தார்.
அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் எடுத்த சமாதான முன்முயற்சிகளை ஆதரித்தார்.
1993 ஆம் ஆண்டு உலக வரலாற்றில் ஆச்சர்யக்குறி விழுந்தது!
கிளிண்டன் தலைமையில் ஒஸ்லோ நகரில் பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத்தும், இஸ்ரேல் அதிபர் இட்ஷாத் ராபினும் செய்து கொண்ட அமைதி உடன்படிக்கை உருவானது. உலகம் கைத்தட்டியது.
ஆனால் ஹமாஸ் எதிர்த்தது. அது இஸ்ரேலை நம்பத் தயாராக இல்லை. அது போலவே பின்னர் இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை மதித்து நடக்காமல், அராஜகங்களில் ஈடுபட்டது என்பது தனி செய்தியாகும்.
ஒருவழியாக காஸா, மேற்கு கரை என இரு பகுதிகளைக் கொண்ட 6,220 சதுர கிலோ மீட்டர் கொண்ட சுதந்திர பாலஸ்தீனம் உருவானது. இதில் மேற்கு கரை 5760 சதுர கிலோமீட்டர் ஆகும். சென்னையைவிட சற்று பெரியது. 360 சதுர கிலோ மீட்டர் கொண்ட காஸா துண்டு நிலம் என்பது காரைக்காலை விட சற்று பெரியது. பாண்டிச்சேரியை ட சிறியது.
இரண்டுக்கும் இடையில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.
வரலாற்றில்; வாழிடத்தில் பெரும் பகுதியை இஸ்ரேலிடம் இழந்த பாலஸ்தீனர்கள், சிறிய இடமாவது சுதந்திர பூமியாக கிடைத்ததே என ஆறுதல் கொண்டாலும் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை. இஸ்ரேலின் ரவுடித்தனம் அவர்களை அவ்வப்போது சீண்டிப் பார்த்தது.
இவ்வளவு நிகழ்வுகளுக்குமிடையே அனைவரும் எதிர்பார்த்த அந்த சந்திப்பு நிகழ்ந்தது!
PLO தலைவர் யாசர் அராபத்தும் ஹமாஸ் தலைவர் ஷேக் அஹமது யாசின் அவர்களும் சந்திந்து மகிழ்ச்சியில் கைகளை உயர்த்தினர். பாஸ்தீனத்தை கடந்தும் இக்காட்சி வரவேற்பை பெற்றது.
அப்போது 'நாங்கள் ஒரு பறவையின் இரு சிறகுகள் ' என்று சிலாகித்தார் யாசர் அராபாத்!
காலம் சிரித்தது...ஒரே ஆண்டில் இரு தலைவர்களும் அடுத்தடுத்து விடைபெற்றனர். இது பாலலஸ்தீனர்களை சோகத்தில் ஆழ்த்திற்று.
11.11.2004 அன்று யாசர் அராஃபத் இஸ்ரேலிய உளவாளிகளால் மெல்ல, மெல்ல மனிதனைக் கொல்லும் பொல்லெனியம் என்ற விஷம் மூலம் கொல்லப்பட்டார். அப்போது ரமல்லா நகரில் உள்ள வீட்டுச் சிறையில் இஸ்ரேலால் அவர் முடக்கப்பட்டிருந்தார்.
அவரது மரணம் இயற்கை மரணமாக அறிவிக்கப்பட்டது!
ஷேக் அகமது யாசின் 22.03.2004இல் அதிகாலை இஸ்ரேலிய படை நடத்திய குண்டு வீச்சில் கொல்லப்பட்டார்.
தலைவர்களை இழந்த பின்னும் இவ்விரு இயக்கங்களும் சோர்வடைய வில்லை.
PLO அரசியல் இயக்கமாகவும், ஹமாஸ் போராளிகள் இயக்கமாகவும் பயணிக்கின்றன. பாலஸ்தீனர்கள் இவ்விரு இயக்கங்களையும் நம்புகிறார்கள்!
இன்று பாலஸ்தீன அதிபராக PLO-வின் முஹம்மது அப்பாஸ் இருக்கிறார். அங்கு நிழல் சகோதர யுத்தம் நீடித்தாலும், இஸ்ரேலிய வன்முறைகளுக்கு எதிராக PLO மற்றும் ஹமாஸ் அமைப்புகள் உணர்வுகளால் ஒன்றுபட்டுள்ளனர்.
இப்போது அங்கே மீண்டும் போர் தொடங்கியுள்ளது.
2013இல் நடந்த பெரும் தாக்குதலுக்குப் பிறகு காஸாவின் மீது இஸ்ரேலிய பயங்கரவாத தாக்குதல்கள் இப்போது தொடங்கியுள்ளது.
வழக்கம்போல் அரபு நாடுகள் தங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டுள்ளனர். ஆனால் காசாவில் ஹமாஸின் பின்னே பாலஸ்தீனர்கள் திரண்டெழுந்து அல் அக்ஸாவுக்கு போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
குடியிருப்பு கட்டடங்கள் மீது இஸ்ரேலிய படைகள் நடத்தும் தாக்குதல்களில் 200 க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். போர் அறத்தையும் மீறி ஊடகங்கள் செயல்படும் கட்டடங்களையும் இஸ்ரேல் தரைமட்டமாக்கியுள்ளது.
அமெரிக்க - இஸ்ரேலின் சக்தி மிகு நவீன ஆயுதங்களை எதிர்கொண்டு ஹமாஸ் போராளிகள் அஞ்சாமல் பதிலடி கொடுத்துவருகின்றனர்.
சர்வதேச நாடுகள் பதறுகின்றன. ஐநா வழக்கம்போல் அமைதி, அமைதி, என கூறுகிறது. செயலில் ஒன்றையும் சாதிக்கவில்லை! எப்போதும் போல அமெரிக்கா, இஸ்ரேலை பாதுகாக்கிறது.
லெபனானின் ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேலை பணிய வைத்தது போன்ற ஒரு ராணுவ நடவடிக்கை தேவை என ஹமாஸ் கருதுகிறது.
பாலஸ்தீன மக்கள் தங்கள் சமரசமற்ற விடுதலை இயக்கத்தை வீதிகளில் முன்னிறுத்தி போராடி வருகிறார்கள். ஜெருசேலம் நகரின் உரிமையும், அல்- அக்ஸாவின் உரிமையும் அங்கு அமைதியை கேள்விக்குரியாக்கி வருகின்றது.
இப்போது அங்கு தேவை போரா? நிரந்தர அமைதியா? என்றால் அமைதிதான் முதலில் தேவை.
ஆனால் சுதந்திர பாலஸ்தீனத்தை பறிகொடுத்துவிட்டு அமைதியை பேசுவது அநீதியாகும். அங்கு நிரந்தர அமைதி தேவை எனில் இரு நாட்டு கோட்பாடுகள் என்பது சம அளவில் மதிக்கப்பட வேண்டும்.
ரஷ்யா, துருக்கி, சீனா, இந்தியா, மலேஷியா, ஜெர்மனி போன்ற நாடுகள் கூட்டு சேர்ந்து ஐ.நா. மூலம் அமைதி முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இதை உலகம் எதிர்பார்க்கிறது.
மேற்காசியாவில் அமைதிப் புறாக்கள் சிறகு விரித்து பறக்க வேண்டும். அதுவே மூன்றாம் உலக யுத்தத்தை தவிர்க்க உதவும்!
(கட்டுரையாளர் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் சர்வதேச அரசியல் விமர்சகர்)