விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூரில் திமுகவின் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் கலந்து கொண்டதோடு தமிழக அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
விழா மேடையில் பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ''நான் சொல்கிறேன் என்று யாரும் தப்பாக நினைக்கக் கூடாது, அண்ணா ராஜ்ய சபாவிற்கு போன பிறகுதான் அவரது அறிவாற்றலை கண்டு அத்தனை பேரும் வாய் பிளந்து நின்றார்கள். நீண்ட காலம் அவர் டெல்லி வாசத்தில் இல்லை. அதற்குப் பிறகு கலைஞர் வந்தார். அவர் முதலமைச்சராகி முதல் முதலாக டெல்லிக்கு போன பொழுது அவரை மிக சாதாரணமாக நினைத்தார்கள். முதல் முதலில் அவர் மொரார்ஜி தேசாயை பார்க்கப் போனார். 5 மணிக்கு அவருக்கு அவகாசம் கொடுத்தார்கள். ஆனால் டிராபிக் ஜாமில் 10 நிமிடம் லேட்டாக போனார் கலைஞர். போனவரை முதல் முறையாக ஒரு சீப் மினிஸ்டர் வருகிறார் என்று மொரார்ஜி தேசாய் 'வாழ்த்துக்கள் எப்படி இருக்கிறீர்கள், தமிழ்நாட்டிற்கும் நாட்டிற்கும் உங்கள் சேவை தேவை' என்று சொல்லவில்லை கலைஞருக்கு வாழ்த்து கூட சொல்லாமல், மொரார்ஜி தேசாய் சொன்னாராம் 'நான் என்ன உங்கள் வீட்டு வேலைக்காரனா உங்களுக்காக காத்துக் கொண்டிருப்பதற்கு' என்று எடுத்த உடனே நெருப்பைக் கொட்டி இருக்கிறார்.
அந்த இடத்தில் கலைஞர் சொன்னார் 'அந்த நாற்காலியில் அமரக் கூட எனக்கு மனம் இல்லை. இருந்தாலும் நெருப்பின் மேல் உட்காருவது போல் அந்த நாற்காலியில் உட்கார்ந்தேன்' என்று. அடுத்த கேள்வி கேட்டாராம் 'எங்கே வந்தீர்கள்' என்று, 'நிதி கேட்பதற்காக வந்திருக்கிறேன். நீங்கள்தான் நிதி அமைச்சர்' என்று கலைஞர் சொன்னாராம். அதற்கு 'நிதி எங்கே கொட்டி கிடக்கிறது. என் வீட்டு தோட்டத்தில் என்ன பணம் காய்க்கிற மரமா இருக்கிறது உனக்கு அறுத்துக் கொடுப்பதற்கு' என்று இரண்டாவதாக சாடி இருக்கிறார். அதுவரையில் பொறுமைகாத்த கலைஞர் சொன்னாராம் 'பணம் காய்க்கும் மரமே உலகத்தில் கிடையாது. பிறகு உம் தோட்டத்தில் எப்படி ஐயா இருக்கும்' என்று கேட்ட பொழுதுதான், இவரிடத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நினைத்தாராம் மொரார்ஜி.
அப்படி முதல் முறையிலேயே புறக்கணிக்கப்பட்ட தலைவர் பிறகு பிரதமர்களை தேர்ந்தெடுப்பதற்கு, குடியரசுத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கு யார் என்று கேட்டால் அது கலைஞரால்தான் முடியும் என்று இந்தியாவே ஒத்துக் கொண்டு போனது. ஆனால் ஸ்டாலின் கட்சியின் தலைவராகி, முதலமைச்சரான உடன் இன்றும் அதிகமாக அவருடைய கவனம் வடநாட்டில் செலுத்தப்படாத காலத்திலேயே இன்றைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர்களிலேயே முதல் அமைச்சராக இருக்கக்கூடியவர் ஸ்டாலின் தான் என்பதை அகில இந்தியா ஒத்துக் கொண்டிருக்கிறது. நமக்குள் ஆயிரம் வேற்றுமை உண்டு பிஜேபிக்கும் நமக்கும். ஆனால் பிரதமர் மோடி ஸ்டாலினை பார்க்கிறபோதெல்லாம் சொல்வார் 'கட்சி அரசியல் இருக்கட்டும் ஸ்டாலின். உன்னை எனக்கு பிடிக்கிறது. நீ வந்தால் என் வீட்டிலே தங்கு. உன்னை ஏற்றுக் கொள்கிறேன்' என்று சொல்கிற அளவுக்கு இவருடைய கண்ணியம் பண்பாடு தலைதூக்கி நிற்கிறது'' என்றார்.