தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். பிரச்சாரம், பரப்புரை, வாக்கு சேகரிப்பு, கட்சியினருடனான ஆலோசனை கூட்டம் என தேர்தல் களம் வேட்பாளர்களின் பேச்சுக்களால் அனல் பறந்து கொண்டிருக்கின்றது.
சேலம், தருமபுரி ஆகிய தொகுதிகளில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் அதிமுக வேட்பாளர்களையும் ஆதரித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தருமபுரியில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட அவர், “எடப்பாடி பழனிசாமி வந்தவழி தெரியும் என்றார். அது அனைவருக்கும் தெரியும்; யாருக்கு தெரியாமல் இருக்கிறது. எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையா தேர்ந்தெடுத்தாங்க நான் முதலமைச்சர் ஆனேன். கலைஞரை நம்பியா மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தார்கள். அண்ணாவை நம்பி ஓட்டு போட்டு முதல்வராக்கினார்கள். அவர் மறைந்த பிறகு கலைஞர் முதல்வரானார்.
அண்ணா மறந்தபோது எப்படி கலைஞர் முதல்வரானாரோ, அதுபோல் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு என்னை முதல்வராக தேர்ந்தெடுத்தார்கள். இதில் என்ன தப்பு? உங்க அப்பா என்ன நேரடியாகவாக வந்தார்? உங்க அப்பாவிற்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா?” என்று பேசினார்.