தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள் முறையாக செய்யவில்லை என்று திமுக தரப்பு உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. சென்னை தியாகராயநகரில் உள்ள ஜெகத்ரட்சகனின் நட்சத்திர ஹோட்டலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது திமுக நிர்வாகிகள் வரும் உள்ளாட்சி தேர்தலில் எப்படி களப்பணி செய்ய வேண்டும் என்று ஆலோசித்ததாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணியில் அதிக உறுப்பினர்களை சேர்த்த நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கலந்து கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் பேசும் போது, 1980 ஆம் ஆண்டு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் திமுக இளைஞரணி ஆரம்பிக்கப்பட்டது. அப்போது 7 நிர்வாகிகளில் ஒருவராக நான் பணியாற்றினேன். அப்போது நான் கலைஞரின் எதிர்ப்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றிவிட்டேன் என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஆனால், நன்றாக உழைப்பேன் என்ற பெயரை கலைஞரிடம் வாங்கினேன். அதேபோல் நான் கலைஞரிடம் வாங்கிய பெயரை உதயநிதி என்னிடம் வாங்குவார் என எதிர்ப்பார்க்கிறேன். இளைஞரணியில் விரைவில் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பார்கள் என நம்புகிறேன். உதயநிதி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தமிழகம் முழுவதும் இன்னும் ஏராளமான உறுப்பினர்கள் சேர்க்கப்பட இந்த நிகழ்ச்சி காரணமாக இருக்கும் என்று பேசினார்.