அண்மையில் தொடர்ச்சியாகத் தமிழக அரசிற்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து முரண்கள் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே செந்தில் பாலாஜி விவகாரத்தில் அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த மோதல் இன்னும் அதிகரித்தது. தொடர்ந்து எதிர்ப்பின் காரணமாக ஆளுநர் மாளிகையின் அந்த அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல் புதுச்சேரி ஆளுநரும் அவ்வப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்து புதுச்சேரி அரசிற்கும் தனக்கும் இருக்கும் மோதல் விவகாரங்கள் குறித்து விளக்கமளித்து வருகிறார். அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் ரங்கசாமிக்கும் எனக்கும் இடையே இருப்பது அண்ணன் தங்கை பிரச்சனை என விளக்கமளித்திருந்தார். அதேபோல் தெலுங்கானா ஆளுநராகவும் தமிழிசை அவ்வப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநர்கள் அரசியல் பேசுவது குறித்த கேள்விக்கு, ''தமிழக ஆளுநர் பத்திரிகையாளர்களை சந்தித்தால் என்னை விட மகிழ்ச்சியான ஆள் யாரும் கிடையாது. ஏனென்றால் திமுகவின் வண்டவாளங்கள் தண்டவாளங்கள் வெளியே வரும். ஆனால் சந்திக்கக் கூடாது என்பது எங்களுடைய கருத்து. காரணம் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. இதில் தெளிவாக இருக்கிறோம். ஆளுநர் அவருடைய கடமையை மட்டும் தான் செய்ய வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறை ஆளுநர்கள் பத்திரிகையில் பிரிண்ட் ஃபார்மெட் இன்டர்வியூ கொடுப்பார்கள். அப்படித்தான் இத்தனை காலமாக ஆளுநர்கள் இருந்தார்கள். மற்ற ஆளுநர்களை பற்றி நான் கமெண்ட் கொடுக்க விரும்பவில்லை.
திமுக தவறு செய்திருந்தால் அதை பாஜக கிரிட்டிசைஸ் பண்ணுவது வேறு, ஆளுநர் கிரிட்டிசைஸ் பண்ணுவது வேறு. ஆளுநர் கிரிட்டிசைஸ் பண்ணும் பொழுது ஆக்கப்பூர்வமாக பேசலாம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை பிரிண்ட் ஃபார்மேட் இன்டெர்வியூவில் சொல்லலாம். ஆனால் தினம் தினம் ஆளுநர்கள் என்னைப் போல் பேச ஆரம்பித்தால் ஆளுநர் என்ற தகுதிக்கு மாண்பு இல்லாமல் போய்விடும். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும்... கூட ஆளும் கட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நாங்கள் குற்றச்சாட்டை மக்கள் மன்றத்தில் வைக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆளுநர் அதே குற்றச்சாட்டை வைத்தால் மரபு சரியாக இருக்காது'' என்றார்.