கடந்த 17 ஆம் தேதி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “கொச்சியிலிருந்து பெங்களூரு வரை எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் மீண்டும் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டு பகுதியான ஓசூர் அருகே கெலமங்கலத்தில் விளைநிலங்களில் குழி தோண்டப்பட்டு, எரிவாயு குழாய்கள் பதிக்கப்படுவதைத் தமிழ்நாடு முதல்வர் தடுத்து, விவசாயிகளின் வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலை ஓரம் இந்த எரிவாயு குழாய்களைக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தற்போது விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணிகளை உடனே கைவிட வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் ஓபிஎஸ்-ஸின் அறிக்கைக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். அதில், ''அதிமுக ஆட்சியில்தான் கெயில் நிறுவனம் கிருஷ்ணகிரியில் எரிவாயு குழாய் பதித்தது. உண்மை இதுவாக இருக்க எதுவும் அறியாதது போல் ஓபிஎஸ் அறிக்கை விடுகிறார். தற்பொழுது புதிதாகச் செயல்படுவது போன்ற ஒரு மாயையை உருவாக்க ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். எங்கெல்லாம் சாத்தியக்கூறு உள்ளதோ அவ்விடங்களில் எல்லாம் சாலையின் ஓரத்தில் குழாய் பதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. வளர்ச்சி திட்டங்களுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது'' எனத் தெரிவித்துள்ளார்.