சட்டமன்றத் தேர்தலையொட்டி, தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் விருப்ப மனு விநியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. 28ஆம் தேதி வரையிலும் விருப்பமனுவைக் கொடுக்கலாம் என திமுக தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் விருப்ப மனு வாங்கி, தாக்கல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், முகூர்த்த தினமான நேற்று மட்டும் ஏராளமானோர் விருப்ப மனு கொடுக்க வந்தனர். அப்போது, முக்கிய நிர்வாகியான திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிட மனுத் தாக்கல் செய்தார். கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை தொகுதிக்கும், அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதிக்கும், பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி தொகுதிக்கும், பிரச்சாரக்குழு செயலாளர் சிம்லா முத்துச்சோழன் ஆர்.கே.நகர் தொகுதிக்கும், கவிஞர் சல்மா மணப்பாறை தொகுதிக்கும் டாக்டர் கந்தசாமி ஊத்தங்கரை தனித் தொகுதிக்கும், வடசென்னை திருவொற்றியூர் தொகுதிக்கு கே.பி.பி.சங்கரும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தனர். இதுபோல நிர்வாகிகள் ஏராளமானோர் விருப்ப மனு தாக்கல் செய்த நிலையில், நேற்று தலைமை அலுவலகம் செல்லும் தேனாம்பேட்டை சாலை வரையிலும் மக்கள் வெள்ளம் நிரம்பிக் கிடந்தது.