சிவகாசியில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகனான விஜயபிரபாகரன், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
“விஜயபிரபாகரான நான்” என்று கம்பீரமாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவர் பேசியபோது “இந்த பெல்ட்டே கேப்டன் கோட்டைன்னு சொல்லுவேன். எங்க அப்பா உங்களைச் சந்திக்க என்னை அனுப்பியிருக்கார். ராஜேந்திரபாலாஜி அண்ணன் என்னையே, ஒருமையில பேச வேணாம்னு சொல்லிருக்காரு. அண்ணன் சொன்னா நான் கேட்டுக்கிறேன். அழகர்சாமி அண்ணன் படிப்புல கொஞ்சம் கம்மியா இருந்தாலும், அவருக்கென்று ஒரு அங்கீகாரம் கிடைக்கிற அளவுக்கு வளர்ந்து, இன்று எம்.பி. கேன்டிடேட் ஆகியிருக்காரு. அதுக்குக் காரணம் கேப்டன். அது ஏன்னா. தேமுதிகவுக கடைக்கோடித் தொண்டனா இங்கே எனக்கு முன்னால எத்தனையோ பேர் நிக்கிறீங்க. நாளைக்கு உங்கள்ல எத்தனை பேரு எம்.பி., எம்.எல்.ஏ.ன்னு என் கண்ணுக்குத் தெரியல. அதேமாதிரிதான், கேப்டன் வந்து அழகர்சாமி அண்ணனை தேர்வு செஞ்சிருக்காரு. பயன்படுத்திக்கிறது உங்களோட புத்திசாலித்தனம். கூட்டணிகள் வரும் போகும். ஆனா, என்றைக்கும் தெய்வத்தோடும் மக்களோடும்தான் எங்க கூட்டணி. திமுகவும் காங்கிரசும் எதுக்கு ஓட்டு கேட்டு வர்றாங்கன்னு எனக்குத் தெரியல. ஏன் இதைச் சொல்றேன்னா? அவங்களோட பிரதமர் வேட்பாளர் யாருன்னு அவங்களுக்கே தெரியல.
பிரதமர் யாருன்னே தெரியாம அந்தக் கூட்டணிக்கு எதுக்காக ஓட்டு போடணும்? இவ்வளவு நாள் நாம எல்லாருமே ஹார்ட் ஒர்க்கர்ஸா இருந்தோம். உழைச்சி.. உழைச்சி. உழைச்சி.. உழைச்சிட்டே இருந்தோம். இந்தத் தேர்தல்ல கொஞ்சம் ஸ்மார்ட் ஒர்க்கர்ஸா இருந்து கொஞ்சம் புத்திய யோசிங்க. புத்திய யோசிச்சு சிந்திச்சு இந்தவாட்டி தேர்தலுக்கு ஓட்டு போடுங்க. மோடிஜி சில முடிவுகள் எடுத்து கொண்டுவந்தாங்க. அது நமக்கு கஷ்டமா இருந்திருக்கலாம். இல்லாம இருக்கலாம். அவர் எடுத்ததெல்லாம் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு எடுத்த முடிவுகள். அந்தக் காலத்துல மாட்டு வண்டில போனோம். இப்பவும் மாட்டு வண்டிதான் ஓட்டிக்கிட்டிருக்கோம். சில மாற்றங்கள் வரும்போது நமக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். அதையெல்லாம் தாங்கிக்கிட்டு நீங்க ஆதரிச்சீங்கன்னா. பின்னாடி ஃப்யூச்சர்ல நம்ம பசங்களுக்கு எல்லாமே நல்லதா வந்துசேரும்னு நான் நினைக்கிறேன்” என்றார் இயல்பாக.
வாக்காளர்களுக்கு புத்திமதி சொல்லும் அளவுக்கு, அதற்குள் அரசியலில் அசுர வளர்ச்சி அடைந்துவிட்டார் குட்டி கேப்டன்!