அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் முதல் நாள் விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
இதில் நீதிபதிகள், ஈபிஎஸ் ஓபிஎஸ் என இரு தரப்பிடமும் சரமாரி கேள்விகளை எழுப்பினர். இருதரப்பும் தங்கள் வாதத்தினை முன் வைத்த நிலையில் வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இன்று பிற்பகல் 2 மணியளவில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு 2ஆவது நாளாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் ஓபிஎஸ் தரப்பு தங்கள் தரப்பு வாதத்தை முன் வைத்தது.
அதில், “ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு என்பது அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவது. தேர்தல் மூலம் அதிமுகவில் தேர்ந்தெடுக்கப்படும் பதவி பொதுச்செயலாளர் பதவி மட்டுமே. ஈபிஎஸ் தரப்புக்கு வசதியாக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் இடத்திற்கு வேறு யாரும் வரக்கூடாது என்பது ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் நிலைப்பாடு. தொண்டர்களின் நிலைப்பாட்டை மீறி பொதுச் செயலாளராக ஈபிஎஸ் வர முயற்சி செய்கிறார். ஜூலை 11ஆம் தேதி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு முழுக்க சட்ட விரோதமானது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளும் சட்ட விரோதமானவை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செய்துவிட்டு புதிய பதவியை உருவாக்க முடியாது” என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்தி வைத்தது. நாளை இரு தரப்பினரும் தங்கள் வாதங்களை நிறைவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.