போதைப் பொருளுக்கு எதிராக மத்திய பா.ஜ.க அரசு நடத்தி வரும் வேட்டையில் தமிழ்த் திரைப்படங்களில் முகம் காட்டிய இரு நடிகைகள் சிக்கிக் கொண்டுள்ளனர் என பரபரப்பான செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஒருவர் சோனாக்ஷி சின்ஹா. பிரபல இந்தி நடிகரும்- பா.ஜ.க.வின் எம்.பி.யாக இருந்து, அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பா.ஜ.க.வை எதிர்த்து பீகாரில் அரசியல் செய்தவருமான சத்ருகன் சின்ஹாவின் மகளான சோனாக்ஷி சின்ஹா, ரஜினியின் நாயகியாக "லிங்கா' படத்தில் நடித்துள்ளார். இன்னொருவர் ரகுல் பிரீத் சிங். இவர் நடிகர் கார்த்தியுடன் 'தீரன் அதிகாரம் ஒன்று' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர். அத்துடன் 'ஸ்பைடர்', 'தடையறத் தாக்க' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இருவரும் 2017-ம் ஆண்டு, அக்டோபர் 20-ம் தேதி மும்பையில் உள்ள உயர்தர வகுப்பினர் வந்து செல்லும் கோகோ என்கிற கிளப்பில் நடந்த பார்ட்டியில் நடிகை தீபிகா படுகோனேவுடன் கலந்து கொண்டனர். இந்தியாவின் பேட்மிட்டன் நட்சத்திரமான பிரகாஷ் படுகோனேவின் மகள்தான் இந்தி நட்சத்திரம் தீபிகா படுகோனே.
பிரபல நடிகரான கரண் ஜோஹர் கோகோ கிளப்பில் நடத்திய பார்ட்டி யில் தீபிகா, சோனாக்ஷி, ரகுல் பிரீத்சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த பார்ட்டியில் கரண் ஜோஹர் ஒரு வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில், பார்ட்டியில் கலந்துகொண்ட அனைவரும் ஒரு விதமான போதையில் இருந்துள்ளனர். அந்த வீடியோவை ஆதாரமாக வைத்து மஞ்சித்சிங் என்கிற சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்தவர் போலீசில் புகார் கொடுக்கப்போகிறேன் என அறிவித்தார். உடனே மோடிக்கு நெருக்கமான நடிகையான கங்கனா ரணவத், தீபிகா படுகோனேக்கு போதைப் பழக்கம் உள்ளது. அவர் காதலில் தோல்வி அடைந்தவர். அதனால் ஏற்பட்ட மனச்சோர்வுக்கு காரணம் தேடி போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார். எனவே அவரை போதைத் தடுப்பு போலீசார் விசாரிக்க வேண்டும் என ட்வீட் செய்தார். கங்கனாவின் இந்த ட்வீட் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பதட்டத்தை உருவாக்கியது.
சுசாந்த் சிங் ராஜ்புத் என்ற நடிகரின் தற்கொலையைத் தொடர்ந்து ரியா சக்கரபர்த்தி என்கிற காதலியும், அவரது தம்பியும் கைது செய்யப்பட்டார்கள். அதைத்தொடர்ந்து கங்கனா ரணவத் பாலிவுட்டில் உள்ள பிரபல நடிகைகளை மட்டும் குறி வைக்கிறார். ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் போன்ற நடிகர்களில் யாரையுமே அவர் குறைசொல்வதில்லை. நடிகைகளைக் குறை சொல்லும் கங்கனா, இமாச்சலப்பிரதேசத்தில் பிறந்தவர். இந்தியாவில் அதிகம் கஞ்சா பயிரிடப்படுவது இமாச்சலப் பிரதேசத்தில்தான். ஒரு முறை கஞ்சா போதையில் டெல்லி விமான நிலையத்தில் அரைகுறை ஆடைகளுடன் கங்கனா சுற்றித் திரிந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் நிறைய இருக்கிறது என விமர்சனங்கள் எழுந்தது.
ஆனால், கங்கனாவின் ட்வீட்டை மிகவும் சீரீயஸாக எடுத்துக்கொண்ட மத்திய போதைத்தடுப்பு போலீசார் கரண் ஜோஹர் நடத்திய பார்ட்டிக்கு முன்பாக தீபிகா, ஹசிஸ் என்ற போதைப்பொருள் கிடைக்குமா என தனது மேனேஜரை வாட்ஸ் அப்பில் கேட்ட பதிவு ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதை வைத்து தீபிகாவையும் அவரது மேனேஜரையும் விசாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். அத்துடன் அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட சோனாக்ஷியையும், ரகுல் பிரீத்சிங்கையும் விசாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்கிறது மத்திய அரசு வட்டாரங்கள். பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் பீகார் மண்ணின் மைந்தனான சுசாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையை சி.பி.ஐ விசாரிக்க ஆரம்பித்தது. கடைசியில் அது தற்கொலை என அந்த வழக்கை கை விட்டுவிட்டு அவரது காதலி ரியாவை சுசாந்த் சிங் ராஜ்புத்திற்கு போதைப் பொருள் கொடுத்தார் என வழக்கை திசை மாற்றியது.
அதேபோல் பீகார் தேர்தலில் பா.ஜ.க.விற்கு எதிராக எதுவும் பேசக்கூடாது என பீகாரில் பிரபலமான நடிகரான சத்ருகன் சின்காவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக அவரது மகள் சோனாக்ஷியை குறி வைக்கிறது. நடுவில் ஏன் தீபிகா வந்தார் என்றால், பா.ஜ.க கொண்டு வந்த சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களை டெல்லி போலீஸ் கடுமையாக தாக்கியது. அந்த மாணவர்களுடன் இணைந்து வீதியில் இறங்கி ஊர்வலகம் சென்றவர் தீபிகா.
பொதுவாக மும்பை, கல்கத்தா, சென்னை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் உள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிவு ஜீவிகள் போன்றோர் பா.ஜ.க.வுக்கு எதிராக கருத்துத் தெரிவிக்கிறார்கள். அவர்களில் கௌரி லங்கேஷ் போன்றவர்களைச் சுட்டுக் கொன்றார்கள். வரவர ராவ் போன்றவர்களை அர்பன் நக்சல்கள் எனச் சிறையில் அடைத்தார்கள். தீபிகா படுகோனே போன்றவர்கள் மீது போதை வழக்கு எனச் சிறையில் தள்ள முயற்சிக்கிறார்கள் என பா.ஜ.க. அரசின் மீது விமர்சனத்தை முன்வைக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.