நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மறைமுக தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வான நிலையில், சில இடங்களில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையே திமுக வேட்பாளர்கள் வென்றனர். இதனைத் தொடர்ந்து தலைமையின் அறிவிப்புக்கு மாறாக செயல்படுவதாக திமுக கூட்டணிக் கட்சிகள் சில இடங்களில் குற்றச்சாட்டை வைத்தன. "கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் ராஜினாமா செய்துவிட்டு என்னை வந்து சந்திக்க வேண்டும்" என அதிரடி அறிக்கை விட்டிருந்தார் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்.
சிலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த நிலையில் உசிலம்பட்டி நகர செயலாளர் தங்கப்பாண்டி, ஆம்பூர் நகர செயலாளர் ஆறுமுகம், சபீர் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. மேலும் திருமங்கலம் நகர பொறுப்பாளர் முருகன், உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதந்திரம் தற்காலிகமாக நீக்கப்படுவதாகவும், உசிலம்பட்டி இளைஞரணி அமைப்பாளர் சந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நீக்கப்படுவதாகவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று காலை அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாகவும் கடலூர் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ கோ.அய்யப்பன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.