Skip to main content

பேரம் பேசி  ‘கட்டுடல்’ தலைவர் பட்டபாடு! -மெகா கூட்டணி பரிதாப பின்னணி!

Published on 31/03/2019 | Edited on 31/03/2019

 

“தேர்தல் நேரத்துல லெட்டர் பேடு கட்சிங்ககூட கல்லா கட்டுது.  கட்சி ஆரம்பிச்சு 12 வருஷம் ஆச்சு. இந்தத் தேர்தல்ல எங்க கட்சியோட நிலைமையும் தலைவரோட பேரும் அநியாயத்துக்கு டேமேஜ் ஆயிருச்சு.” என்று நொந்துபோய்ச் சொன்னார் அந்தக் கட்சியின் நிர்வாகி ஒருவர். 

 

a

 

அந்த  ‘டேமேஜ்’ தலைவரோ, அவருக்கு சீட்டே தராத மெகா கூட்டணியின்  காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். “ஈழத்தமிழர் படுகொலை குறித்து பேசுகிறார் வைகோ.  பத்து ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சிதான். அப்போது மேடைக்குமேடை ஈழத் தமிழர் படுகொலை குறித்துப் பேசிவிட்டு, இப்போது திமுக காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கிறார். இது சரியா?” என்று கேள்வி எழுப்ப, வைகோ அபிமானி ஒருவர் இவர் ‘யோக்கியதை’ தெரியாதா? என்று சென்னையில் நடந்த கூட்டணி பேரத்தை விவரித்தார். 

 

n

 

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட, தன் கட்சிக்காக முதலில் 3 சீட் கேட்டார் அந்த ‘டேமேஜ்’ தலைவர்,  மெகா கூட்டணி சார்பாக பேச்சுவார்த்தை நடத்த வந்தவர்களிடம். அவர்களோ   “உங்க கட்சிக்கு வாக்கு வங்கி என்பதே இல்லை. சமுதாய வாக்குகள் என எந்தத் தொகுதியிலும் 1 லட்சமோ, 2 லட்சமோ வாக்குகள் பெற்றதும் இல்லை. இடைத்தேர்தல் ஃபார்முலா என்று இன்றுவரை பேசப்படும்  2009 தேர்தலில், சினிமா பிரபலங்கள் என்ற தகுதியிருந்தும், கணவனும் மனைவியும் களத்தில் இறங்கி வேலைபார்த்தும்,  உங்கள் கட்சி வேட்பாளர் 831 வாக்குகளைத்தானே பெற்றார்? உங்கள் முகத்துக்காக வேண்டுமென்றால் ஒரு சீட் தருகிறோம்.” என்றார்கள். உடனே, அந்தத் தலைவர் சினிமாவில் செய்வதைப் போலவே,  தன் கட்டுடலை  முறுக்கிக்காட்டி “தனித்துப் போட்டியிடுவேன்.” என்று சீற,   “ஒரு சீட் என்பதே உங்க கட்சிக்கு அதிகம்..” என்று முகத்துக்கு நேராகவே  ‘பஞ்ச்’ விட்டு கிளம்பிவிட்டார்கள் மெகா கூட்டணியினர்.  

 


அந்தக்  ‘கட்டுடல்’  தலைவரும் தனித்துப் போட்டியென்று தன் கட்சியினரிடம் கூவிப் பார்த்தார். 39 தொகுதிகளில் நிறுத்துவதற்கு 38 வேட்பாளர்கள் பற்றாக்குறை ஆனது. அதன்பிறகு, தன்னுடைய பலவீனம் அறிந்து,  “சரி, சொன்னபடி அந்த ஒரு சீட் கொடுங்க..” என்று கேட்டார் தலைவர். மெகா கூட்டணியினரோ,  “டெல்லி தலைவர் கலந்துகொள்ளும்  கூட்டத்தில் மேடையேற்றி சேர்த்துக்கொள்கிறோம்.” என்று பிடிகொடுக்காமல் பேசினர்.

 

தலைவரோ, ஒரு சீட்டாவது தந்தால்தான் டெல்லி தலைவர் கூட்டத்துக்கு வருவேன் என்று முரண்டுபிடித்து போகாமல் இருந்துவிட்டார். அதன்பிறகு, மெகா கூட்டணியினர் ‘கட்டுடல்’ தலைவரைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆனாலும், தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல், தலைவர் மெகா கூட்டணியினரிடம் பேசுவதற்கு மாறிமாறி ஆட்களை அனுப்பினார். அவர்களோ, தொடர்ந்து உதாசீனப்படுத்தினார்கள்.  பிறகு சீட் கேட்ட நிலை மாறி, பண பேரத்தில் வந்து நின்றது. தலைவர் ஒரு பெரும் தொகை கேட்க, “கட்டாது..” என்றனர்.

 

n

 

படிப்படியாக இறங்கிவந்த தலைவர் “கொடுக்கிறத கொடுங்க..” என்று கெஞ்ச ஆரம்பித்தார். ஆனாலும், மெகா கூட்டணியில் ஐக்கியமாகி பிரச்சாரம் செய்வதற்கு ஒரு நிபந்தனை விதித்தார். அது என்னவென்றால், “இதற்கு முன்பெல்லாம் உங்க கட்சித்தலைமை என் வீட்டுக்கு இரண்டாம் கட்டத் தலைவர் ஒருவரை பேச்சுவார்த்தை நடத்த அனுப்பி வைக்கும். அதுமாதிரி, அந்த நம்பர் 2 தலைவரை அனுப்புங்க. அப்போதுதான், என்னுடைய இமேஜுக்கு சரியாக இருக்கும் என்று கெஞ்சலாக கேட்டுக்கொண்டார். வீட்டு வாசலைத் திறந்துவைத்து காத்திருந்தார்.  மெகா கூட்டணியினரும், சிலநாட்கள் கொஞ்சம் போக்கு காட்டிவிட்டு,  நம்பர் 2 தலைவரையும் அமைச்சர் ஒருவரையும் வீட்டுக்கு அனுப்பினார்கள். அந்த போட்டோ நியூஸுடன் வருவதற்கு முயற்சி எடுத்து வெற்றிகண்டார்  ‘முறுக்கு’ தலைவர். கேட்டது கிடைத்து செட்டில் ஆனபிறகு,  நம்பர் 1 தலைவர் வீட்டுக்கே போய் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.  


சென்னை மேலிட விவகாரங்களை அறிந்திருந்த அந்த வைகோ அபிமானி, “சினிமாவில் தீர்ப்பு சொல்பவராக நடித்து புகழ் பெற்றார்.   அரசியலிலோ,  அநியாயத்துக்கு சொதப்புகிறார்.” என்று சத்தமாகச் சிரித்தார்.  

வரவர, சில தலைவர்கள் பண்ணும் அரசியல் சிரிப்பாய் சிரிக்கிறது!

சார்ந்த செய்திகள்