மதுரை பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்ய சத்யன். இவர் மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவான ராஜன் செல்லப்பாவின் மகன். ராஜ்ய சத்யனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க அமைச்சர் செல்லூர் ராஜுடன் ராஜன்செல்லப்பா புதூர் சங்கர் நகரில் உள்ள முஸ்லீம் ஜமாத் பள்ளி வாசல் முன்பு வெள்ளிக்கிழமை மதியம் சென்றனர்.
அப்போது தொழுமை முடித்துக்கொண்டு வந்தவர்கள், நீங்கள் அதிமுகவுக்காக மட்டும் வாக்கு சேகரிக்க வந்திருந்தால் உள்ளே வரலாம். பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
அதற்கு செல்லூர் ராஜு, பாஜகவினர் யாரும் வரவில்லை. நாங்கள் மட்டுமே வந்துள்ளோம் என்று கூறியுள்ளார். இதனை ஏற்காத அவர்கள், அமைச்சரையும் எம்எல்ஏவையும் பள்ளிவாசலுக்குள் அனுமதிக்காமல் வெளியேற்றினர்.
பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவுக்கு மதுரை முழுவதும் வாக்கு அளிக்க மாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம் என்று பள்ளிவாசலின் நிர்வாக குழு உறுப்பினர் அப்பாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி கூறுகையில்,
இந்தியாவின் மிகப்பெரும் ஜனநாயக திருவிழாவாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் கருத்து வேறுபாடுகள், கொள்கை மாறுபாடுகள், கள சிக்கல்கள் இவற்றுக்கிடையே, வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கிறார்கள். இது சட்டம் அவர்களுக்கு தந்திருக்கும் உரிமையாகும்.
இந்நிலையில் எங்கள் இடத்துக்கு அல்லது எங்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் வாக்கு கேட்டு வரக்கூடாது என தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. அப்படி, வருபவர்களை விரட்டி விடும் செயலும் உகந்ததல்ல.
இது போன்று வட இந்தியாவில் வெவ்வேறு சமூக வேட்பாளர்களை, மாற்று கருத்துடையவர்களை எங்கள் செல்வாக்குள்ள பகுதிகளுக்கு நுழைய விட மாட்டோம் என கூறும் சங்பரிவார வகையறாக்களுக்கும், இதற்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும். இது வீண் விமர்சனங்கள் புறப்பட வழி வகுத்து விடும்.
அந்தந்த ஊர்களில் தேர்தலுக்கு பிறகு ஒருவரையொருவர் முகம் பார்க்க வேண்டி வரும் என்பதை மறந்து விடக் கூடாது. வீண் பகைமை உருவாகவும், நிரந்தர பிளவு உருவாகவும் வழி வகுத்து விடக் கூடாது. ஆவேசமும், கோப உணர்ச்சியும் அறிவையும், பண்பாட்டையும் சிதைத்து விடக் கூடாது.
எனவே, கொள்கை எதிரிகள் அல்லது கொள்கை ரீதியாக அணி மாறியவர்கள் என யாராகினும், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் வந்து வாக்கு கேட்பதை தடுக்காதீர்கள். அது ஜனநாயக விரோத செயலாகி விடும்.
மாறாக, அவர்களிடம் நமது கோரிக்கைகளை, விருப்பங்களை தெரிவியுங்கள். அல்லது உங்கள் உணர்வுகளை வாக்குகளின் மூலம் வெளிப்படுத்துங்கள்.
தேர்தல் அரசியலை கடந்து கிராமங்கள், நகரங்கள், பெரு நகரங்கள் எங்கும் சமூக நல்லிணக்கத்தை கட்டி காக்கும் சமூக கடமை அனைவருக்கும் இருக்கிறது. அதை மறந்து விடக் கூடாது.
இதனை ஊர் தலைவர்கள், அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் கவனத்தில் எடுத்து , பொறுப்புணர்வுடன் பக்குவமாக இவற்றை எதிர்கொள்ளுமாறு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அறிவுறுத்துகிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.