சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் அவரை ஓ.பன்னீர்செல்வமும், பண்ருட்டி ராமச்சந்திரனும் சந்தித்துள்ளனர். தொடர்ச்சியாக மாநாடுகளை நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டிருப்பதாகவும் மாநாட்டில் பங்கேற்க டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்க இந்த சந்திப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
டிடிவி மற்றும் சசிகலா உடன் இணைந்து பணியாற்ற தயார் என ஓபிஎஸ் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் இந்த சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும் தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு பெரிதாக வாக்கு வங்கி இல்லாததால் அங்குள்ள அதிமுக வாக்குகளைத் தன் பக்கம் இழுக்க முயற்சிகள் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்க இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சந்திப்பு முடிந்த பின் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், “இரு இயக்கங்களும் சேர்ந்து செயல்படுவது என முடிவெடுத்துள்ளோம். ஒரே லட்சியம் தான். எம்ஜிஆர் துவக்கி ஜெயலலிதா கட்டிக் காத்த இயக்கத்தை அதன் அடிமட்டத் தொண்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனும் லட்சியத்துடன் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியே செயல்பட்டார்கள். அதே லட்சியத்துடன் சேர்ந்து செயல்படுவது என்று இன்று முடிவெடுத்துள்ளோம். எப்படி இடது கம்யூனிஸ்ட் கட்சி வலது கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து செயல்படுகிறார்களோ அப்படி இணைந்து செயல்படுவோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய டிடிவி, “ராமச்சந்திரன் சொன்னது போல் இடது வலது கம்யூனிஸ்ட் போல் செயல்படுவோம். எனக்கும் ஓபிஎஸ்க்கும் சுயநலம் என்ற எண்ணம் எல்லாம் கிடையாது. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் கையில் இந்த இயக்கம் இருக்க வேண்டும். அதை கபளீகரம் செய்தவர்களிடம் இருந்து அதிமுகவை மீட்டு திமுகவை வீழ்த்த உண்மையான ஜெயலலிதாவின் தொண்டர்கள் இந்த இயக்கத்தை வழிநடத்தும் முயற்சியாக நானும் ஓபிஎஸ்ஸும் இணைந்துள்ளோம்” எனக் கூறினார்.