கள்ளக்குறிச்சியில் கரையேறுமா காங்கிரஸ் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி தொகுதியில், காட்டுமன்னார்கோயில் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மணிரத்தினம் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தனபால், இளையராஜா, சீனிவாசன் என்று பலரும் சீட் கேட்டு எதிர்பார்த்திருந்த நிலையில், தொகுதி மாறி இங்கு களமிறக்கப்பட்டுள்ளார் மணிரத்தினம். இவரை தொகுதி வாக்காளர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற இக்கட்டான சூழ்நிலை இருந்தது. அதை தனது செயல்பாடுகள் மூலம் மாற்றிக் காட்டியுள்ளார் மணிரத்தினம்.
அதைவிட அதிமுக வேட்பாளராக, அமைப்புசாரா அணி செயலாளர் செந்தில்குமார் அறிவிக்கப்பட்டதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ‘இவருக்குத் தொகுதியில் செல்வாக்கு இல்லை; அறிமுகம் இல்லை, எனவே இவரை உடனடியாக மாற்ற வேண்டும். அதற்குப் பதில் என் மனைவி அழகுவேல் பாபுவை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்’ என்று கூறி அதிமுக நகரச் செயலாளர் பாபு தலைமையில் ஐந்து நாட்கள் மறியல் போராட்டம் நடந்தது. ஆனால், கள்ளக்குறிச்சியில் வேட்பாளர் மாற்றப்படவில்லை. காரணம், மாவட்டச் செயலாளர் குமரகுரு பாபுவை சமாதானப்படுத்தினார். அதோடு செந்திலுக்கு தேர்தல் பணி செய்யுமாறு கட்சித் தலைமையும் அறிவுறுத்தியுள்ளது.
அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளின் கூட்டணி வேட்பாளர்களும் முதலில் பல்வேறு இடர்களை சந்தித்து, தற்போது பிரச்சாரத்தில் இருவரும் அவரவர் கூட்டணிக் கட்சித் தொண்டர்களுடன் பரபரப்பாக ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களோடு தேமுதிக சார்பில் விஜயகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் முத்தமிழ்ச்செல்வி ஆகியோரும் போட்டியில் உள்ளனர்.
இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில் குமாருக்கும், காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்தினத்திற்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மாவட்டத் தலைநகரமான கள்ளக்குறிச்சி நகரில் கணிசமான அளவில் இஸ்லாமியர் வாக்குகள் உள்ளன. அதோடு திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளும் பலமாக உள்ளன. அவை மணிரத்தினத்திற்கு பெரிதும் கைகொடுக்கும். அதன்மூலம் கரையேறலாம் என்று வெற்றி கணக்குப் போட்டுள்ளார் மணிரத்தினம்.
அதே நேரத்தில் அதிமுக வேட்பாளர் செந்தில் குமார், வசதி இல்லாத ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு சீட்டா என்று தொகுதியிலுள்ள கட்சியினர் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தனர். ஆனால், ‘செந்தில்குமாரை வெற்றிபெற வைப்பது என்னுடைய முழு பொறுப்பு’ என்று மாவட்டச் செயலாளர் குமரகுரு கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி செந்தில் குமாரை வேட்பாளராக நிற்க வைத்துள்ளார். செந்தில் குமார், எல்லாவற்றுக்கும் முழுக்க முழுக்க குமரகுருவையே நம்பியுள்ளார்.
தொகுதியில் கட்சி கடந்து, பலதரப்பட்ட மக்களிடமும் தனது செயல்பாடுகள் மூலம் பலத்த செல்வாக்கை நிலைநிறுத்தியுள்ளார் சிட்டிங் எம்.எல்.ஏ. பிரபு. தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், கட்சி அறிவித்த வேட்பாளரை வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற உறுதியோடு வேட்பாளர் செந்தில்குமாருடன் தொகுதியில் சுற்றிச்சுழன்று ஓட்டு கேட்டு வருகிறார். தொகுதியில் பாமகவிற்கும் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. போட்டியில் பலர் இருந்தாலும், பிரதான போட்டியாளர்கள் காங்கிரஸ் மணிரத்தனமும், அதிமுக செந்தில்குமாரும்தான்.