அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெற்ற 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.
அப்போது, "பொதுமக்களின் அச்சத்தைத் தீர்க்கக்கூடிய அரசாக தி.மு.க. ஆட்சி இருக்கும். மூன்று வேளாண் சட்டங்களால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்குமா? நெசவாளர்கள், அரசு ஊழியர்கள் உட்பட அனைவரும் அச்சத்தில் உள்ளனர். அரையணா காசாக இருந்தாலும் அரசு வேலையாக இருக்க வேண்டும் என நினைத்தவர்கள் அச்சத்தில் உள்ளனர். தேர்தல் நெருங்குவதால் அவசர அவசரமாக டெண்டர் விட்டு வருகிறார் முதல்வர். தேவை இல்லாத இடத்தில் பாலம் கட்டுகிறார்கள், சாலை அமைத்த இடத்தில் மீண்டும் சாலை போடுகிறார்கள். இன்னும் மூன்று மாதங்களில் அமையவுள்ள தி.மு.க. அரசு, கொள்கை அரசாகவும், சேவையாற்றும் அரசாகவும் இருக்கும்" என்றார். இந்தக் கூட்டத்தில் தி.மு.க.வை சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.