சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக கூட்டணி கட்சியினரின் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், மே 23க்குப் பின்னர் ஆட்சி மாற்றத்தை நடத்திக் காட்டுகிறோம் என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார்.
அப்படியானால் 22 தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு சாதகமாக ரிசல்ட் கிடைத்தால் ஆட்சி மாற்றம்தானா? என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினின் மனநிலை என்னன்னு திமுக சீனியர்களிடம் விசாரித்தபோது, 88 எம்எல்ஏக்களைக் கொண்டிருக்கும் திமுக, இந்த 22 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்றாலும் கூட 110 எம்எல்ஏக்கள் தான் அவர்கள் கையில் இருப்பார்கள்.
ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் ஆகியவற்றின் ஆதரவு தேவை. ஆனால் ஸ்டாலினோ சொந்த பலத்தில் மட்டுமே ஆட்சியில் அமர வேண்டும் என்று நினைக்கிறாராம். அதனால் இப்போது ஆட்சியைக் கவிழ்க்கும் அளவிற்கு வலிமை இருந்தால் போதும். அதன் மூலம் எடப்பாடி ஆட்சியை அப்புறப்படுத்திவிட்டு, பொதுத்தேர்தலில் மக்களை சந்தித்து, தனி மெஜாரிட்டியோடு திமுக ஆட்சியை அமைக்கலாம் என்கிற வியூகத்தில்தான் அவர் இருக்கிறார் என்று சொல்லுகிறார்கள்.