ஆளுங்கட்சியான திமுகவில் மாவட்டச் செயலாளர்கள், மாநகரச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள் மற்றும் நகரம், ஒன்றியச் செயலாளர்கள், பேரூர், கிளை கழகம் உள்பட அனைத்து பொறுப்புகளுக்கும் உட்கட்சித் தேர்தல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.
கடந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில், 35 வார்டுகளை திமுக கவுன்சிலர்கள் கைப்பற்றினர். இதன் மூலம் திண்டுக்கல் மாநகராட்சியின் மேயராக இளமதியும், துணை மேயராக ராஜப்பாவும் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் 12 வார்டுகளுக்கு ஒரு பகுதி செயலாளர் உள்பட 11 பொறுப்பாளர்களுக்கான உட்கட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக கட்சி பொறுப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு விருப்ப மனு கொடுத்ததுடன், அமைச்சர் ஐ. பெரியசாமியிடமும் பரிந்துரைக்கும்படி கேட்டுவருகின்றனர்.
திண்டுக்கல் மாநகர் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என நான்கு பகுதி செயலாளர்கள் உள்பட பொறுப்பாளர்கள் நியமிக்க இருக்கிறார்கள். இதில் வடக்கு பகுதிச் செயலாளர் பதவிக்கு முன்னாள் கவுன்சிலர் ஜானகிராமன். கிழக்குப் பகுதிச் செயலாளர் பதவிக்கு மாநகராட்சி கவுன்சிலர் வெங்கடேஷ், அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க தலைவர் ராஜேந்திரகுமார், மாவட்ட பிரதிநிதி சரவணன், மாநகர கவுன்சிலர் சித்திக் ஆகியோரும், மேற்கு பகுதிச் செயலாளர் பதவிக்கு முன்னாள் நகர் மன்றத் தலைவர் பசீர் அகமது மகனான பசுலுக்சக், மாநகர கவுன்சிலர் மார்த்தாண்டம், தெற்கு பகுதிச் செயலாளர் பதவிக்கு முன்னாள் கவுன்சிலர் சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் பகுதி செயலாளர் பதவிக்கு விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். இதில் கட்சிக்காக உழைத்து வருபவர்களுக்கும், மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கக் கூடியவர்களுக்கும் பகுதி செயலாளர்கள் பதவி கொடுக்க அமைச்சர் ஐ.பெரியசாமி தீவிர ஆலோசனையில் இருந்து வருவகிறார்.