தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும் பின்னர் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில், காலை எட்டு மணிக்கு துவங்கப்பட்ட தபால் வாக்குகளிலேயே திமுக கூட்டணி முன்னிலையில் வந்துகொண்டிருந்தது. இருந்தபோதிலும் அதிமுகவும் விடாமல் திமுகவை முந்தும் வகையில் நெருங்கி வந்துகொண்டிருந்தது.
இந்நிலையில், காலை 10.00 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 134 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 98 சட்டமன்றத் தொகுதிகளிலும், மநீம, அமமுக, நாதக ஆகியவை எதிலும் முன்னிலையில் இல்லாமலும் இருக்கின்றன.
திமுக கூட்டணியில்
திமுக: 111
காங்: 10
மதிமுக: 4
சிபிஎம்: 2
சிபிஐ: 2
விசிக: 4
மற்றவை: 1
என மொத்தம் 134 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மையாக ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். தற்போது திமுக கூட்டணி 134 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.