காவல்துறையில் இருந்தபோது சம்பாதித்து சேர்த்து வைத்த பணத்தை தேர்தலில் செலவு செய்து தேர்தலுக்கு பின் நான் கடனாளியாக இருக்கிறேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஓரிரு தினங்கள் முன் சென்னை அமைந்தகரையில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, பாஜக தமிழ்நாட்டில் வளர திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று பேசியதாகச் சொல்லப்படுகிறது. அவர் தனது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. தனித்து நிற்பது தொடர்பான பேச்சுக்கு வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி, பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நான் காவல்துறையில் 9 ஆண்டுகள் சம்பாதித்த அத்தனை பணமும் அவரக்குறிச்சி தேர்தலில் போய்விட்டது. அவையெல்லாம் குருவி சேர்ப்பது போல் நான் சிறுக சிறுக சேர்த்து வைத்தது. டீசல் போடனும், பெட்ரோல் போடனும் என்று எல்லாம் செலவாகிவிட்டது. எலெக்ஷன் முடிந்தவுடன் நான் சத்தியமாக கடனாளியாகத் தான் இருக்கிறேன். இந்த நேரத்தில் மறுபடியும் ஒரு பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றால் இந்திய அரசியல் களத்தில் ஒரு பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க 80 கோடி ரூபாயிலிருந்து 120 கோடி ரூபாய் வரை செலவு பண்ண வேண்டும் என்பது பொதுவான கணக்கு. இதை செய்து விட்டு இங்கு கிளீன் பாலிடிக்ஸ் என்று பேச முடியாது” எனக் கூறி இருந்தார்.
இந்நிலையில், அண்ணாமலை கூறியதற்கு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம், “காவல்துறை அதிகாரியாக சிறுக சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்தேன். தற்போது கடன்காரனாக இருக்கிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார். தற்போது இருக்கும் வீட்டின் வாடகை மாதம் 3.5 லட்ச ரூபாய்; நடத்தும் வார்ரூம் யூடியூபர்கள் செலவு மாதம் 8 லட்சம்; யூடியூபர் ஒருவருக்கு மட்டும் 2 லட்சம்; இப்படி உச்ச ஆடம்பரத்தில் வாழும் அண்ணாமலை அருகே யாரோ வைத்துக் கொண்டு சொல்வது பணம் இல்லாத அரசியல் வேண்டும்” எனக் கூறியுள்ளார்.