அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5, புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதியும், புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதியும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உடன்பாடு ஏற்படுத்தியுள்ளனர். மேலும் பாஜகவின் அழுத்தம் காரணமாக தேமுதிகவுக்காக கூட்டணியை இறுதி செய்யாமல் வைத்திருந்தனர்.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்பாடு ஏற்பட்டதும், அன்றைய தினமே இந்த கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என்று பாஜகவின் பியூஸ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்திரராஜன் ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதீஷ் ஆகியோரை சந்தித்து கூறினர்.
அப்போது அவர்கள் இரண்டு இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கூறியதால் இழுபறி ஏற்பட்டது. பின்னர் தொடர்ந்து பேசி வந்த பாஜகவிடம் பாமகவுக்கு குறையாமல் தொகுதிகளை கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்தது.
பிப்.6 மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணியை இறுதி செய்து கூட்டணித் தலைவர்களை மேடையேற்ற வேண்டும். ஆகையால் தேமுதிகவிடம் நேரடியாக பேசி சுமூகமான உடன்பாட்டை ஏற்படுத்தும்படி அதிமுகவுக்கு பாஜக கூறியது. இதையடுத்து அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளோம் என்றதும் இழுபறி ஏற்பட்டது.
பாஜகவின் அழுத்தம் காரணமாக துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் கடந்த திங்கள்கிழமை விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். பாமகவுக்கு குறையாமல் தொகுதிகளை கொடுக்க வேண்டும் என்று கூறியதால் அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கடும் எரிச்சல் அடைந்தனர்.
இதன் காரணமாகத்தான் வண்டலூர் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேமுதிக கொடிகள் அகற்றப்பட்டன. விஜயகாந்த் படமும் அகற்றப்பட்டது. பிப்.6ஆம் தேதி வெளியான நாளிதழ்களில் பொதுக்கூட்டத்திற்கான விளம்பரங்களிலும் விஜயகாந்த் படமும் இடம்பெறவில்லை.
பிப்.6ஆம் தேதி மோடி பொதுக்கூட்டத்திற்கு வந்த பியூஸ்கோயலிடம், தேமுதிக கூட்டணியில் இடம்பெறுமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ஆச்சரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்றார்.
அதனைத் தொடர்ந்து தனியார் ஓட்டல் ஒன்றில் விஜயகாந்த் மைத்துடன் சுதீஷுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் பியூஸ் கோயல். இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக வருகிறது என்று செயதிகள் பரவியதால் மீண்டும் விஜயகாந்த் படம் மேடையில் வைக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் இருந்தனர். ஆனால் இதில் தேமுதிக ஏற்கனவே கூறிய கருத்தை மீண்டும் வைத்தது.
ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த பியூஸ் கோயல், பேச்சுவார்த்தையை பாதியில் முடித்துவிட்டு பொதுக்கூட்டத்திற்கு கிளம்பிவிட்டார். இதனால் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் கிலி ஏற்படுத்த திமுகவின் பொருளாளர் துரைமுருகனை தேமுதிக நிர்வாகிகள் நேரடியாக சந்தித்து பேசியுள்ளனர். இந்த செய்தி பாஜக தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டதும், கடும் அதிர்ச்சியடைந்தனர். அதிமுகவினரோ உடனடியாக விஜயகாந்த் படத்தை மேடையில் இருந்து நீக்கிவிட்டனர்.
தேமுதிக நிர்வாகிகள் தன்னை சந்தித்து பேசியதை துரைமுருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதேபோல் சுதீஷும் இதனை திமுகவிடம் பேசினோம் என்று தெரிவித்தார்.
''தேமுதிகவுக்காக அதிமுகவிடம் நாம் மல்லுக்கட்டி பேசி வருகிறோம். ஆனால் நம்மை முட்டாளாக்கிவிடலாம் என்று திமுகவிடம் பேசுகின்றனர்'' என்று தமிழக பாஜக தலைவர்கள் டெல்லி பாஜக தலைவர்களிடம் வருத்தத்தை தெரிவித்துள்ளனர். மேலும் மேடையில் பியூஸ் கோயலிடம் பேசிய அதிமுக தலைவர்கள், ''கடந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் உள்பட தேமுதிக வேட்பாளர்கள் அனைவரும் தோற்றுவிட்டனர். நம்மிடம் பேசிக்கொண்டே திமுக பக்கமும் பேசியிருக்கிறார்கள். ஆனால் திமுக அங்கு கதவை சாத்திவிட்டது. இப்படிப்பட்ட நேரத்தில் தேமுதிக நமக்கு தேவையா? வெற்றிப்பெறுவதற்கான வியூகங்களை நாம் வகுப்போம்'' என்று அட்வைஸ் செய்துள்ளனர். ''திமுகவிடம் சீட் இல்லை என்று சொல்லியும் 45 நிமிடங்கள் சீட் தேவை என்று தேமுதிக நிர்வாகிகள் வலியுறுத்தியதாக துரைமுருகனே பேட்டியில் கூறியிருக்கிறார்'' என பாஜக மேலிடத் தலைவர்களுக்கு எடுத்துக் கூறி தேமுதிகவுக்காக நாம் பேச வேண்டுமா? ஒதுங்கிக்கொள்ளலாமா? என்று யோசிக்குமாறு கூறியுள்ளார் பியூஸ்கோயல். பாஜக மேலிடமும் இதனை யோசிக்க தொடங்கியுள்ளதாம்.