நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அநீதியானது என்றும், அதனைக் காரணம் காட்டி ராகுல் காந்தியை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ள ஒன்றிய அரசின் சர்வாதிகார நடவடிக்கையை கண்டித்தும், இந்த நடவடிக்கைகள் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது எனக் குற்றம் சாட்டியும் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, திருச்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக அறவழியில் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள், கோட்ட வார்டு தலைவர்கள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள், கட்சியின் முன்னணி தலைவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய பாஜக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.