நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
இந்நிலையில், தனியார் ஆங்கில இதழில் வெளியான கட்டுரையை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புகழ்பெற்ற தனியார் ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதில், 27% பேர் வேலைவாய்ப்பின்மை தான் முக்கியப் பிரச்சினை என்றும், 23% பேர் விலைவாசி உயர்வு என்றும், 55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், ஏழை மக்களில் 76% பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்சினை என்றும் கூறியுள்ளனர்.
இதில் இருந்தே இந்த பாஜக ஆட்சியின் முடிவுக்கான கவுண்டவுன் (Countdown) ஆரம்பம் ஆகிவிட்டது. அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், பத்தாண்டு கால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள். சிலரைச் சில காலம் ஏமாற்றலாம். எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது” எனத் குறிப்பிட்டுள்ளார்.