அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், கட்சியின் சட்ட திட்ட விதிகள் 19 உட்பிரிவு 7 மற்றும் 25 உட்பிரிவு 2இன்படி, வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி ( 15.12.2024 - ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அவைத் தலைவர் அ. தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.
எனவே கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தர வேண்டும். இதன் மூலம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக அதிமுகவின் கிளை, வட்டம் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாகக் கள ஆய்வு செய்தற்காக 'கள ஆய்வுக் குழு' அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் அதிமுக கட்சி பணிகளை மேம்படுத்துவது தொடர்பான கருத்துகளைப் பெற்றிடவும், புதுப்பிக்கப்பட்ட கட்சி உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாகக் கட்சி உறுப்பினர்கள் அனைவரிடமும் சென்றடைந்ததா என்பதை உறுதி செய்தும், அதன் விபரங்களை அறிக்கையாக அளிக்க உள்ளனர்.
இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்களான, கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செம்மலை, பா. வளர்மதி மற்றும் வரகூர் அ. அருணாசலம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதன்படி இந்த குழுவினர், கட்சி அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்து, அதன் விபரங்களை டிசம்பர் 7ஆம் தேதிக்குள் (07.12.2024) அறிக்கையாகச் சமர்ப்பிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.