தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையொட்டி தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று (22.11.2024) வெளியிட்டிருந்த வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, 23ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு இனங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தெற்கு அந்தமான் கடல் பகுதிகளிலிருந்து மன்னார் வளைகுடா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி நிலவுகிறது. எனவே 24ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று (23.11.2024) வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை கன்னியாகுமரி, தூத்துக்குடி திருநெல்வேலி, ராமநாதபுரம், மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.