கரோனாவுக்கு எதிரான போரில் ஒற்றைப் பெண்மணியாகக் களமிறங்கி உள்ளார் நெல்லையை சேர்ந்த சுப்புலட்சுமி. தி.மு.க.-வில் பெரிய பதவி ஏதும் இல்லை என்றாலும், மக்கள் சேவைக்கு எதற்கு பதவி என்ற அடிப்படையில், தம்மால் இயன்றவரை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
ஏழை எளிய மக்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் அரிசி, காய்கறி, முக கவசம் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களைத் தமது சொந்தச் செலவில் வழங்கி வருகிறார். மேலும், நெல்லை மாநகரில் நோய் பரவலை தடுக்கும் பொருட்டு, அவரே களமிறங்கி கிருமிநாசினி மருந்து தெளித்து வருகிறார்.
பிச்சையெடுக்கவும் தயார்:
சில தினங்களுக்கு முன்னர் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்காக பிச்சையெடுக்கும் நூதன போராட்டமும் நடத்தினார். “தமிழகமெங்கும் உள்ள தற்காலிக தூய்மைப் பணியாளர்களை நிரந்தர பணியாளராக மாற்றிட அரசு உடனே உத்தரவிட வேண்டும். ஏனென்றால் இந்தக் கொடூரமான கரோனா தொற்று தீ போல் பரவிக் கொண்டிருக்கும் இந்த நிலையிலும், தன் உயிரைத் துச்சமென மதித்துக் குப்பைகளை அள்ளி கிருமி நாசினிகளைத் தெளித்துக் கொண்டிருக்கும் இந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு நிரந்தர பணி ஆணை உடனே வழங்கிட வேண்டும். நிதி இல்லை என்று அரசு கூறினால் இன்று பிச்சை எடுப்பது போல் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சென்று பிச்சை எடுத்து நிதி திரட்டி அரசுக்குத் தர தயாராக இருக்கிறேன்” என்று அப்போது கூறினார்.