“மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்குச் சேவை செய், அவர்களுடன் திட்டமிடு, அவர்களுக்குத் தெரிந்தவற்றிலிருந்து தொடங்கு, அவர்களிடம் இருப்பதை வைத்து கட்டமைப்பு செய்.” என்று தம்பிகளுக்குச் சொன்னார் அறிஞர் அண்ணா.
1949-இல் அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுக தற்போது, ‘மக்களிடம் செல்வோம்.. மக்களிடம் சொல்வோம்.. மக்களின் மனதை வெல்வோம்’ என்று தமிழகம் முழுவதும் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்திவருகிறது.
தமிழகத்தின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றான திமுகவுக்கு மக்களிடம் செல்வதிலும், மக்களிடம் சொல்வதிலும் ஒரு சிரமமும் இருக்கப்போவதில்லை. அதேநேரத்தில், மக்கள் மனதை வெல்வதுதான் பெரும் சவாலாக இருக்கிறது.
மக்களைப் பெரிதும் ஈர்த்த தலைவர் எம்.ஜி.ஆர்.!
அந்தக் காலத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்காக ஊர் ஊராக வருவார் எம்.ஜி.ஆர். சிலநேரங்களில், சில ஊர்களுக்கு அவர் வருவதற்குள் விடிந்துவிடும். ஆனாலும், விடிய விடியக் காத்திருந்து பார்ப்பார்கள். அவர் பேசுவதைக் கேட்பார்கள். இந்த டெக்னாலஜி காலத்தில், ஒருவேளை எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தால், அந்த அளவுக்கு மக்கள் அவர்பால் ஈர்ப்புடன் இருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
இன்றைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அப்போது நாடகத்திலும், வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் நடித்தவர்தான். ஆனாலும், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நடிப்பினால் பிரபலமடையவில்லை. கலைஞருக்குப் பிறகு, திமுகவினர் எழுச்சியுடன் கொண்டாடும் தலைவராக இருந்தாலும், அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்த ஒரு தலைவரா என்று கேட்டால், ‘பாசிடிவ்‘ ஆன பதில் இல்லை. ஆனாலும், மக்களைச் சந்திப்பதற்கோ, மக்களில் ஒருவனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கோ, அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. நமக்கு நாமே பயணத்தின்போது, மு.க.ஸ்டாலின் காட்டிய ஆர்வமும், வெளிப்பட்ட சுறுசுறுப்பும் இதனை உறுதிப்படுத்துகிறது. அதன் நீட்சியாகத்தான், பல தொகுதிகளில், குக்கிராமங்களிலும் தொடர்ந்து ஊராட்சி சபைக் கூட்டம் நடத்தி, மக்களைச் சந்தித்து வருகிறார்.
திமுகவினர் நடத்தும் ஊராட்சி சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகிறார்களா? மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கும், தேவைகளுக்கும், மு.க.ஸ்டாலினிடம் தீர்வு இருக்கிறதா? அல்லது, ஆளும் கட்சியினர் கூறுவதுபோல், இது வெறும் அரசியல் ஸ்டண்டா? இதுபோன்ற சில கேள்விகளோடு, சாத்தூர் – அயன் சத்திரப்பட்டியில் நடந்த ஊராட்சி சபைக் கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் வருவதற்கு முன்பே ஆஜரானோம்.
எல்லாமே ஏற்பாடுதான்!
சாத்தூர் தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத, சிவகாசியைச் சேர்ந்த குருசாமியை அங்கே காணமுடிந்தது. கணேசன் என்ற பொறுப்பாளர், “தளபதி வர்றாரு.. அங்கே போய்யா..” என்று அனுப்பி வைத்தாராம். “செலவுக்குப் பணம் அப்புறம் தர்றேன்னு கணேசன் சொன்னாரு.” என்று வெள்ளந்தியாகப் பேசினார் குருசாமி.
குருசாமி - தாயம்மாள்
அந்த இடத்தில் கருப்பு சிவப்பு சேலை அணிந்து பரபரப்பாகச் சுற்றிவந்தார் தாயம்மாள். வயது 61 ஆகியும் இதுவரை வாக்களித்ததே இல்லை என்று கூறிய அவர், “நான் எந்தக் கட்சிலயும் இல்ல. இந்த ஊரு பிரசிடென்ட் பொன்னுச்சாமி கொடுத்த சேலையைத்தான் கட்டியிருக்கேன். பொன்னுச்சாமி வரச்சொன்னாரு. வந்திருக்கேன். ஸ்டாலின் அய்யாகிட்ட என்ன கேள்வி கேட்கணும்னுகூட சொல்லிருக்காங்க. எட்டாவாது வகுப்பு வரைக்கும் இருக்கிற இந்த ஊரு பள்ளிக்கூடத்த தரம் உயர்த்தணும்னு கேட்கப் போறேன்.” என்றார். “பூம்பாறைல இருந்து மூணு வேன்ல நாங்க லேடீஸா வந்திருக்கோம். எல்லாம் பொன்னுச்சாமி ஏற்பாடுதான்.” என்றார்கள் பின் வரிசையில் அமர்ந்திருந்த பெண்கள்.
பேச்சில் ஆன்மிக டச்!
‘ஸ்டாலின் எங்கள் ஸ்டாலின்.. கழகம் காக்கும் எங்கள் ஸ்டாலின்’ என்று பாடல் ஒலித்திட, ‘என்ட்ரி’ ஆனார் மு.க.ஸ்டாலின். அவர் பின்னாலேயே வந்தார்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு போன்ற கட்சியின் முன்னணித் தலைவர்கள்.
“கட்சித் தோழர்கள் பின்னால போங்க.. லேடீஸுக்கு மறைக்காதீங்க..” என்று கூறியவாறு தரை-மேடைக்கு வந்த மு.க.ஸ்டாலின் “நான் பேச வரல. நீங்க பேசுறீங்க. நான் கேட்கப்போறேன். இந்த சத்திரப்பட்டிய ஒரு கோவிலா நினைச்சு தேடி வந்திருக்கேன். கோவிலைத் தேடி யாரு வருவா? பக்தர்கள்தான் வருவாங்க. அதுமாதிரி ஒரு பக்தனா உங்களைத் தேடி வந்திருக்கேன்.” என்றார். மக்களின் மனதை வெல்வதற்காகவோ என்னவோ, பேச்சின் துவக்கத்திலேயே ஆன்மிக டச் தந்த மு.க.ஸ்டாலினின் அடுத்த அட்டாக் ஆளும் கட்சி மீதானதாக இருந்தது. “ஆட்சியில் இருக்கிறவங்க கொள்ளையடிச்சிக்கிட்டு இருக்காங்க. கமிஷன்.. கரப்ஷன்.. கலெக்ஷன்னு எந்த வேலை எடுத்துக்கிட்டாலும். பொதுப்பணித்துறை, காவல்துறை, கல்வித்துறைன்னு எல்லாத் துறைகளிலும் கொள்ளையடிக்கக்கூடிய ஒரு ஆட்சி தமிழ்நாட்டுல நடந்துக்கிட்டிருக்கு. இன்னொரு கொடுமை என்னன்னா.. கொலைக்கு உடந்தையாக இருக்கக்கூடிய ஒரு முதலமைச்சரை இன்றைக்கு நாம் பெற்றிருக்கிறோம். மண்டியிட்டு, கூனிக்குறுகி சசிகலா காலில் விழுந்து கிடந்தவங்க, அதேமாதிரி மோடி காலில் இப்ப விழுந்து கிடக்கிறாங்க.” என்று ஒரு பிடிபிடித்தார்.
தொடரும் தவறுகள்!
ஒருமுறை நெல்லையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் சுதந்திரம் மற்றும் குடியரசு தின தேதியைத் தவறாகக் குறிப்பிட்டதைப் போல, இந்த ஊராட்சி சபைக் கூட்டத்திலும், திருப்பரங்குன்றம் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்து மரணம் அடைந்த ஏ.கே.போஸ் பெயரை மறந்துவிட்டு, “திருப்பரங்குன்றம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சாமி இறந்ததுனால..” என்று, மறைந்த மேலூர் சட்டமன்ற உறுப்பினர் சாமியின் பெயரைத் தவறாகச் சொன்னபோது, யாரும் கண்டுகொள்ளவில்லை.
பேச்சினூடே “எங்க கட்சித் தலைவர் தளபதி..” என்று அவரே தன்னைத் தலைவர் என்றும் தளபதி என்றும் கூறி, மற்ற தலைவர்களிலிருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டினார். பொதுமக்களின் சார்பாக முதல் கேள்வி எழுப்பிய அமுதாவும் “தளபதியாரே! வருக வருக!” என்றுதான் பேச்சைத் தொடங்கினார். ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வறுமையில் உழன்று வருவதை தொகுதியின் குறையாக அமுதா சொல்ல, பதிலளித்த ஸ்டாலின் “இந்தப் பட்டாசுத் தொழிலை நம்பி பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வாழ்ந்துக்கிட்டிருக்கு. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இந்தக் கொடுமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம்.” என்றபோது பலத்த கரகோஷம்.
ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக்கை மூடுங்கள்!
ஐயம்மாள் என்பவர் “கொலை.. கொள்ளை.. புள்ளைங்க காலேஜுக்கு போகமுடியல. பள்ளிக்கூடம் போக முடியல. கற்பழிப்பு பயங்கரமா இருக்கு. இந்த ஆட்சி மாறணும். கலைஞர் ஆட்சி வரணும்.” என்றார். பவுசியா என்பவர் “முஸ்லீம் இடஒதுக்கீட்டில் வீடு கட்டித் தரணும். நம்ம கட்சி ஆட்சிக்கு வந்ததும் கஷ்டப்படற எங்களுக்கு உதவி செய்யணும் சார்..” என்றார் எதிர்பார்ப்போடு. பட்டப் படிப்பை முடித்த திவ்யா “கலைஞரய்யா ஆட்சில இருந்தப்ப எம்ப்ளாய்மெண்ட் மூலமாத்தான் வேலைவாய்ப்பு போட்டுக்கிட்டிருந்தாங்க. இப்ப அதுவந்து இருக்கா இல்லியான்னே தெரியல.” என்று வேதனையை வெளிப்படுத்தினார். திமுக மகளிரணித் தலைவி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட மாரியம்மாள் “ஏழைகளின் பசியைப் போக்கியவர் கலைஞர்..” என்றார். கனகலட்சுமி என்பவர் “எனக்கு உடம்புக்கு முடியல..” என்று மருத்துவரிடம் சொல்வதுபோல் பேச, அவரைத் தேற்ற முடியாமல் தவித்தார் ஸ்டாலின். காளியம்மாள் என்பவர் “திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து போட்டு சாராயக்கடையை மூடணும்.” என்று கூற, அதற்கு ஸ்டாலின் ‘ரியாக்ட்’ பண்ணவில்லை.
“வாறுகால் அள்ளவில்லை; புழுக்கள் நெளிகிறது; கொசு கடிக்குது.” என்கிற ரீதியிலேயே பலரும் குமுறலாகச் சொன்னார்கள். அடுத்தடுத்துப் பேசிய அமீர்பாளையம்வாசிகள் ஒருவர்விடாமல் “பாலத்தில் லைட் எரியவில்லை..” என்பதைப் பெரும் குறையாகச் சொன்னார்கள். ஸ்டாலினும் சளைக்காமல் பெண்களின் பேச்சினை உள்வாங்கி “உள்ளாட்சித் தேர்தல் வரட்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும் எல்லா குறைகளும் சரிசெய்யப்படும். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வரும்.” என்றார்.
ஸ்டாலின் மாமா தமாஷ்!
ரஷீதா என்ற பெண் குழந்தை “ஸ்டாலின் தாத்தாவுக்கு வணக்கம்!” என்று கூற, வேகமாக மறுத்த ஸ்டாலின் “ஸ்டாலின் தாத்தாவா? மாமா.” என்று சிரித்தார். “இந்தக் கூட்டத்தில் 26 பெண்கள் தொகுதி மக்களின் தேவைகளைச் சொல்லியிருக்கின்றீர்கள். உங்கள் அத்தனை பேர் பெயரையும் நான் குறித்துக்கொண்டேன்.” என்று பேசிய ஸ்டாலின், பேடில் தான் எழுதிவைத்திருந்த அத்தனை பெயர்களையும் ஒன்றுவிடாமல் வாசித்தார்.
உலக அளவில் நம்பர் ஒன் திமுக!
அங்கிருந்து வெங்கடாசலபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக - சாத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின் “க்ராஸ் செக் பண்ணுறேன்.” என்று கூறி, வாக்குசாவடி எண் மற்றும் பெயர்களை வாசித்து ‘அட்டெண்டன்ஸ்’ எடுத்தார். அதனால், முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் டிமிக்கி கொடுத்தவர்கள் யார் யாரென்ற குட்டு வெளிப்பட்டது.
மு.க.ஸ்டாலின் தனது உரையில் “நான் மேற்கு வங்கம் சென்றிருந்தபோது பல்வேறு மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என்னைப் பார்த்து தவறான ஒரு கேள்வியைக் கேட்டார்கள். அவர்களிடம் நான், இந்தியாவில் அல்ல.. உலகத்திலேயே, திமுகவைத் தவிர வேறு எந்த இயக்கமும் இத்தனை கட்டமைப்பு கொண்டதாக இல்லை. அண்ணாவும், கலைஞரும் அப்படி ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள் என்றேன். இதுவரை திமுக வரலாற்றில் ஊராட்சி செயலாளர்களை அழைத்து ஆய்வு நடத்திய வரலாறு கிடையாது. நான் செயல் தலைவராகப் பொறுப்பேற்றதற்குப் பின்னால், அந்தக் காரியத்தை நான் செய்தேன்.
மக்கள் எடுத்த முடிவு!
நாடாளுமன்றத் தேர்தலோடு இணைந்து வரும் சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தலில், நிச்சயமாக, உறுதியாக நாம் வெற்றிபெறக்கூடிய தொகுதிகளில், இந்த சாத்தூர் நிச்சயமாக இருக்கும். இது சாதாரண நம்பிக்கை இல்லை. அசைக்க முடியாத நம்பிக்கை. இதற்குக் காரணம் - இங்கே கூடியிருக்கக்கூடிய கூட்டத்தை மனதில் வைத்து நான் சொல்லவில்லை. கட்டுப்பாட்டோடு அமர்ந்திருக்கின்றீர்களே.. இந்தக் காட்சியைக் கணக்குப் போட்டு நான் பேசவில்லை. நாம் எதிர்பார்க்கிறோமோ, இல்லையோ, மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள். சாத்தூர் தொகுதியை மட்டுமல்ல. இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் 21 தொகுதிகளிலும் உறுதியாக திமுகதான் மிகப்பெரிய வெற்றியைப் பெறப்போகிறது என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.” என்று விரிவாகப் பேசினார்.
கலைஞர் ஆற்றல் எனக்கில்லை!
ஆயிரக்கணக்கில் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துகொண்ட சாத்தூர் கூட்டத்தில், எப்போதும் போல, வார்த்தைக்கு வார்த்தை இடைவெளிவிட்டு, ஒரே சீராகப் பேசிய மு.க.ஸ்டாலின் “கலைஞர் ஆற்றிய பணிகளையெல்லாம் முழுமையாக நான் ஆற்ற முடியுமா என்று கேட்டால், அந்த அளவுக்கு ஆற்றல் கிடையாது. அவர் மாதிரி யாரும் பணியாற்ற முடியாது. இனி பிறந்தும் வரமுடியாது. அதுதான் உண்மை.” என்று கட்சித் தொண்டர்களிடம் தன்னிலை விளக்கம் அளிக்கத் தவறவில்லை.
பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு சீரியஸாகவே தயாராகி வருகிறது திமுக!