சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் இருக்கையின் சார்பில் இந்திய அரசியலமைப்பு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் அருள் செல்வி தலைமை தாங்கினார். இருக்கையின் பேராசிரியர் சௌந்தர ராஜன் அனைவரையும் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக முன்னாள் நீதியரசர் சந்துரு கலந்துகொண்டு அரசியலமைப்பு முக உரையை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், மாணவர்கள் இந்திய அரசியலமைப்பு புத்தகத்தை வாசித்து அதன்படி பின்பற்ற வேண்டும். அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளாமல் நம் உரிமையை பெற முடியாது. உரிமையை தைரியத்துடன் கேள்வி கேட்க அரசியல் அமைப்பு சாசனம் மிக முக்கியமானது. சமூக வலைத்தளம், சினிமா அளிக்கும் ஆர்வத்தைக் கொஞ்சமாவது இந்திய அரசியல் சாசனம் குறித்து நாம் அறிந்து கொள்ளக் கொடுக்க வேண்டும். குறிப்பாக மாணவர்கள் கல்வி கற்கும் போதே இந்திய அரசியல் சாசனத்தை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், பல்கலைக்கழக புல முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஊழியர் சங்க பொறுப்பாளர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின சம்பத் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அம்பேத்கர் இருக்கையில் உதவி பேராசிரியர் ராதிகா ராணி அனைவருக்கும் நன்றி கூறினார்.