வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக வெடித்த போராட்டத்தின் காரணமாக பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாட்டை விட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், வங்கதேச நாட்டின் இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றார். இருப்பினும் ஆங்காங்கே கலவரம் நடந்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இது வங்கதேசத்தையும் கடந்து பேசு பொருளாக மாறிய நிலையில் இந்தியா தனது கண்டனத்தையும் பதிவு செய்திருந்தது.
இதற்கிடையில், வங்கதேச கொடியை அவமதித்தாக கூறிய இந்து மத அமைப்பின் தலைவரான சின்மய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் நடந்த இந்து மத ஊர்வலத்தின் போது, வங்கதேசத்தின் தேசியக் கொடி அவமதித்தாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து சின்மய் கிருஷ்ண தாஸ் உள்பட 19பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று முன் தினம் (25-11-24) கைது செய்யப்பட்டார். இவரது கைதுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி நீதிமன்றத்தில் சின்மய் கிருஷ்ண தாஸ் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனிடையே வங்கதேசத்தில் வாழும் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பை அதிகாரிகள் உறுதி செய்ய இந்தியா வலியுறுத்தியதோடு, சின்மய் கிருஷ்ண தாஸை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
சின்மய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து, வங்கதேசம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதே வேளையில், சட்டோகிராமில் பிரங்கி பஜாரில் உள்ள லோகோநாத் கோயில், மான்சோ மாதா கோயில், மற்றும் ஹசாரி லேனில் உள்ள காளி மாதா கோயில் ஆகிய இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்து மத அமைப்பின் செய்தி தொடர்பாளர் ராதாராம் தாஸ் தெரிவிக்கையில், ‘வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் இந்து வழிபாட்டுத் தலங்கள் மீது 24x7 தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அது எப்போது நிறுத்தப்படும்?’ என்று தெரிவித்து இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார்.