முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் .திருநாவுக்கரசர், பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் ராஜ்நாத்சிங்கின் வீட்டுக்குச் சென்று திருநாவுக்கரசர் சந்தித்த விபரம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தனக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்டும், தன் ஆதரவாளர்களான காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் சீட் கேட்டும் பா.ஜ.க.வில் இணைய டீலிங் பேசினார் என்று ராகுல்காந்தி காதுக்கு செய்தி போயிருப்பதாக கூறுகின்றனர். ராகுலும் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார் என்று அக்கட்சி வட்டாரங்கள் பேசிவருகின்றனர்.
இது தொடர்பாக திருநாவுக்கரசர் தரப்பைக் கேட்டால், தி.மு.க. எம்.பி.க்கள் மோடியை சந்தித்து சால்வை போட்டு குறளோவியம் புத்தகம் கொடுக்கலையா? ராஜ்யசபா எம்.பி.யானதுமே டெல்லிக்குப் போன வைகோ, நேராக பா.ஜ.க.வின் சீனியர் மோஸ்ட் தலைவர் அத்வானியைப் பார்க்கலையா? அதுபோன்ற மரியாதை நிமித்தமான நட்புச் சந்திப்புதான் இந்த சந்திப்பு என்று கூறிவருகின்றனர்.