நாடாளுமன்ற ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவராக மூத்தத் தலைவர் மல்லிக்கார்ஜுன கார்கேவை பரிந்துரைத்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் குலாம்நபி ஆசாத்தின் பதவிக் காலம் 15ஆம் தேதியோடு முடிவடைகிறது.
குலாம்நபி ஆசாத்தின் பிரிவு பிரதமர் மோடியை கண்கலங்க வைத்தது. ஆசாத் குறித்து கடந்த வாரம் சபையில் உருக்கமாகப் பேசி எம்.பி.க்களை உணர்ச்சிவயப்பட வைத்தார் மோடி.
காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என சோனியா காந்திக்கு, சில மாதங்களுக்கு முன்பு கட்சியின் மூத்தத் தலைவர்கள் 23 பேர் கடிதம் எழுதி சர்ச்சைகளை உருவாக்கினர். அதற்குத் தலைமை தாங்கியவர் குலாம்நபி ஆசாத். இப்படிப்பட்ட சூழலில்தான் அவரின் ராஜ்யசபாவின் பதவிக் காலம் முடிகிறது.
இந்த நிலையில், ராஜ்யசபாவிற்கான எதிர்க்கட்சியின் புதிய தலைவர் யார் என்கிற எதிர்பார்ப்பு டெல்லியில் அதிகரித்திருந்தது. அந்தப் பதவியை எதிர்பார்த்து மூத்தத் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா உள்ளிட்ட பலரும் காத்திருந்தனர். சிலர் சில முயற்சிகளையும் எடுத்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் பகீரத முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவருக்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிபாரிசு செய்வதாகவும் டெல்லியில் எதிரொலித்தது.
இந்தச் சூழலில், மூத்தத் தலைவர்களுடன் நேற்று (12.02.2021) ஆலோசனை நடத்தியிருக்கிறார் சோனியா காந்தி. அதில் கர்நாடகாவைச் சேர்ந்த மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு ஆதரவு அதிகமிருந்துள்ளது. அந்த வகையில் கார்கேவை தேர்ந்தெடுத்துள்ளார் சோனியா. இதுகுறித்து ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடுவிற்கு கடிதம் எழுதியுள்ள சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கேவை பரிந்துரைத்திருக்கிறார்.