நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திமுக மற்றும் அதிமுக காட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் வேலைகள் துவங்கப்பட்டுள்ளது.
பாஜக உடன் ஏற்பட்ட கூட்டணி முறிவு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அனுதினமும் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கங்களை கொடுத்து வருகின்றனர். பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்பதையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக-அதிமுக கூட்டணி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''பா.ஜ.க.வுடன் அதிமுக கூட்டணி இருக்கிறதா என்று இனியும் கேள்வி கேட்க வேண்டாம். பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கெனவே அறிவித்து விட்டோம். இது குறித்து நான் ஏற்கெனவே பல முறை கூறிவிட்டேன். அ.தி.மு.க. முன்னனி தலைவர்களும் தெளிவுபடுத்திவிட்டனர். கடந்த 2023 செப்டம்பர் 25 ஆம் தேதி அன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க. இல்லை என்று அறிவிக்கப்பட்டு விட்டது'' என தெரிவித்து பாஜக-அதிமுக கூட்டணி முறிவை மீண்டும் உறுதி செய்துள்ளார்.
அதேநேரம் ஓபிஎஸ் மீண்டும் மோடிதான் பிரதமராக வரவேண்டும் எனவும், பாஜக கூட்டணியில் தாங்கள் அங்கம் வகிப்பதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் சென்னை வள்ளலார் நகரில் நடைபெற இருக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தமிழக பாஜக நிர்வாகிகளை சந்தித்து கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல ஓ.பன்னீர்செல்வத்தை ஜே.பி.நாட்டா சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.