கரோனா வைரஸை தடுக்க மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதனையேற்று தமிழகம் முழுவதிலும் உள்ள பொதுமக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிவாரணப் பொருட்களை வழங்கினார். அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் , மசாலா பவுடர், உப்பு உள்ளிட்ட 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வீதி வீதியாக கட்சி நிர்வாகிகளுடன் சென்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விநியோகம் செய்தார்.
இந்த நிலையில், கரோனா ஊரடங்கு மீண்டும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் ,கோவை மாவட்டத்தில் அதிகளவிலான பாதிப்பு இருக்கக் கூடிய 22 மாநகரப் பகுதிகள், 9 ஊரகப் பகுதிகளில் உள்ள 115 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய பொதுமக்கள் 14 நாட்கள் வெளியே வர மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அதிமுக சார்பில் தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு , சர்க்கரை, கோதுமை மாவு, சமையல் எண்ணெய் டீத்தூள், கடுகு, மிளகு, முகக் கவசங்கள் உள்ளிட்ட 14 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார்.
முதல்கட்டமாக கோவை புதூர் பகுதியில் இருக்கக்கூடிய சின்னச்சாமி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்களுக்கு இந்த தொகுப்பினை அமைச்சர் எஸ்.பி வேலுமணி வழங்கினார். ரூபாய் 1கோடி மதிப்பீட்டில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் பொது மக்களுக்கும் இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுமென உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது புதியத் தொற்று கண்டறியப்படுபவர்கள் அந்தந்தப் பகுதிகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏதுவாக பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கே.டி.வி.ஆர் பொறியியல் கல்லூரியில் 400 படுக்கை வசதிகள், பொள்ளாச்சி பி.ஏ கல்லூரியில் 200 படுக்கை வசதிகள், மேட்டுப்பாளையம் நஞ்சை லிங்கம்மாள் திருமண மண்டபத்தில் 100 படுக்கை வசதிகள், ஹிந்துஸ்தான் மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள், கொடிசியா மையத்தில் கூடுதலாக 200 என 1000 படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
மேலும், பொதுமக்கள் தொடர்ந்து முகக் கவசம் அணிவது, சமூக விலகலை கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை கழுவுதல் போன்ற அரசு வழங்கும் அறிவுரைகளைப் பின்பற்றி கொரோனாவை கோவையிலிருந்து முற்றிலும் துரத்தியடித்து உலகிற்கே முன்மாதிரியாக மாறவேண்டும் எனவும் எஸ்.பி.வேலுமணி கேட்டுக் கொண்டார்.