பா.ஜ.க.வைச் சேர்ந்த மாநில பிற்படுத்தப்பட்டோர் அணி செயலாளராக இருக்கிறார் சாய் சுரேஷ். அவர் பேசிய பேச்சுக்கள் தான் தற்போது பாஜக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த தேர்தலில் பா.ஜ.க. அமைத்துள்ள கூட்டணி பற்றி தனக்கு நெருங்கிய பா.ஜ.க. மேலிட நிர்வாகியிடம் கொட்டித் தீர்த்துவிட்டாராம். அதாவது, "சரத்குமார் நமது கட்சிக்கு வந்தாலும், அவரது கட்சி நிர்வாகிகள் யாரும் பா.ஜ.க.விற்கு ஆதரவளிக்க தயாராக இல்லை. அவருடன் யாரும் வரவும் இல்லை. அதனால் சரத்குமார், ராதிகாவை அழைத்துவந்து சீட் கொடுத்ததால் நம் கட்சிக்கு எந்த நன்மையும் கிடைக்காது" என குமுறியிருக்கிறார்.
அதேபோல, ஜி.கே. வாசன் த.மா.கா.விற்கு தூத்துக்குடியும், ஸ்ரீ பெரும்புதூரும் கொடுத்திருப்பதால் பா.ஜ.க.வில் அதிருப்திதான் அதிகரித்துள்ளது. அவர்களுக்கு வெற்றி வாய்ப்பே இல்லாத தொகுதிகளை ஒதுக்கியதால் அவர்கள் முழு மனதோடு வேலை செய்ய மாட்டார்கள். பா.ம.க.வும் நம்மிடம் தேவைப்பட்டதை வாங்கி கொண்டு அன்புமணி, வடிவேல் ராவணன், ஏ.கே மூர்த்தி போன்ற முன்னணி தலைவர்கள் போட்டியிடாமல் ஏமாற்றி உள்ளனர்.
அவர்களாலும் பாஜகவிற்கு எந்த உபயோகமும் இல்லை. உண்மை நிலை இப்படியிருக்க, இரண்டாவது பெரிய கட்சியாக பா.ஜ.க. எப்படி வரமுடியும்? இந்த தேர்தல் தான் நமக்கு வாழ்வா? சாவா ? தேர்தல். ஆனால் கூட்டணியைக் கூட வலிமையாக அமைக்காமல் மாநில தலைவர் பலகீனப்படுத்தி விட்டார். இந்த தேர்தலில் மோசமான பின்னடைவை பாஜக சந்திக்கும் என்று மனம் விட்டு அவர் புலம்பியிருக்கிறார். பாஜகவில் இந்த குமுறல் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.