அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய தேர்தல் ஆணையம் 10 நாட்கள் கால அவகாசம் கோரி இருந்தது.
டெல்லி உயர்நீதிமன்றம் நிர்ணயித்திருந்த காலக்கெடு இன்றோடு நிறைவு பெறுவதால், நேற்று (19/04/2023) இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது. தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ள நிலையில், இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சபாநாயகர் அப்பாவுவை அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்தார். சந்திப்பின் போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் குறித்து பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் ஆ.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஒதுக்க வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளார்.
சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்பது அதிகாரப்பூர்வமாக கிடையாது என்றபோதும் ஒரு மரபின் அடிப்படையிலேயே கொடுக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.