நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், புதுச்சேரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (07.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “புதுச்சேரி மக்களின் முன்னேற்றத்திற்காக திமுக, காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்து பாடுபடுகிறது. ஆனால், புதுச்சேரி மக்களின் முன்னேற்றத்தை தடுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு அறிமுகமே தேவையில்லை. வாக்காளர்கள் கடந்த மக்களவைத் தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வைத்திலிங்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மு.க. ஸ்டாலினின் பிரதிநிதியாக ஒவ்வொருவரும் வைத்திலிங்கத்திற்கு வாக்கு கேட்க வேண்டும்.
மாநிலங்களை மாநகராட்சிகள் போல, புதுச்சேரியை கிராம பஞ்சாயத்து போல மத்திய பாஜக அரசு நடத்தி வருகிறது. இதற்கு புதுச்சேரி முதலமைச்சரும் துணை போகிறார். ஆளுநர்களால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டுமல்ல, பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களிலும் பிரச்சனைதான். நாராயணசாமி முதலமைச்சராக இருந்த போது புதுச்சேரி நிர்வாகத்தை பாஜக சீர்குலைத்தது. புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மூலம் காங்கிரஸ் அரசுக்கு பாஜக அழுத்தம் கொடுத்தது. தமிழகத்தில் ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆளுநராக செயல்படுகிறார். தமிழ்நாட்டு ஆளுநரிடம் நாங்கள் மாட்டி முழித்துக் கொண்டிருக்கிறோம். காவல்துறையில் பதவிக்காலம் முடிந்ததும் அவர்களுக்கு ஆளுநர் பதவி வழங்கி பாஜகவின் ஏஜெண்டுகளாக மாற்றி அவர்களை விளம்பரத்துக்காக பயன்படுத்துகின்றனர்.
ஒட்டுமொத்தமாக அனைவரும் டெல்லிக்கு கீழ் இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் அஜெண்டா. அதனால் தான் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரவில்லை. மாநில உரிமை மட்டுமல்லாமல், யூனியன் பிரதேசங்களுக்கான உரிமைக்காகவும் இந்தியா கூட்டணி போராடுகிறது. மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்கிறார். சமூக நீதி மற்றும் இடஒதுக்கீட்டை பாதுகாப்பேன் என பிரதமர் மோடி ஒரு நாளும் சொன்னதில்லை. மக்களுக்காக ஆட்சி நடத்தாமல் கார்ப்பரேட்டுகளுக்காக பிரதமர் மோடி ஆட்சி நடத்துகிறார்” எனத் தெரிவித்தார்.