தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணபட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு ஆகியவற்றை முடித்து தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாக இருந்துவருகிறது.
அதிமுக சார்பில் போட்டியிடும் 171 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். ஆகியோர் இணைந்து கடந்த 10ஆம் தேதி வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர்களை மாற்றக் கோரி பல்வேறு இடங்களில் அதிமுகவினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதியில் போட்டியிட முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கனகராஜ் மனு கொடுத்திருந்தார். ஆனால், அவருக்குப் பதிலாக தர்ம.தங்கவேலை வேட்பாளராக அறிவித்தது அதிமுக தலைமை. இதனால் கனகராஜும் அவரது ஆதரவாளர்களும் அதிமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்துவருகின்றனர். அதேபோல் அறந்தாங்கி தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்ற வேண்டும் என்றும் அக்கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களிடம் கட்சி சார்பில் சமாதான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. ஆனால், அந்த சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதனால் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
நேற்று (16.03.2021) துணை ஒருங்கிணைப்பளர் எடப்பாடி பழனிசாமி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, வாக்க சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் அவ்விரு தொகுதிகளின் வேட்பாளரை மாற்றக் கோரி மனு கொடுக்க ர.ர.க்கள் காத்திருந்தனர். ஆனால், காத்திருந்த ர.ர.க்களைக் கண்டுகொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த ர.ர.க்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சாலை மறியல் 3 மணி நேரம் வரை நடந்தது.
இந்நிலையில், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் கனகராஜ், தனக்கு ஆலங்குடி தொகுதியில் போட்டியிட சீட் கொடுக்காத அதிமுகவை கண்டித்து தன்னிடம் இருந்த அதிமுக வேட்டிகளை முன்னாள் அமைச்சர் அ.வெங்கடாசலம் நினைவிடம் முன்பு கொண்டுவந்து கொட்டி, தீ வைத்துக் கொளுத்தினார். அப்போது, அதிமுக தலைமை மற்றும் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை கண்டித்து முழக்கமிட்டார். தொடர்ந்து அவர் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ஆலங்குடி தொகுதியில் தொடர்ந்து அதிமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு உள்ளதால் அத்தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.