ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரபரப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் தென்னரசுவும் போட்டியிடுகிறார்கள். அதே போன்று நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் தனித்தனியே வேட்பாளர்களைக் களமிறக்கி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.
தென்னரசுவை ஆதரித்து அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டனர். அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து காங்கிரஸ் தலைவர்கள், திமுக அமைச்சர்கள் பலரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதனையொட்டி ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கில் இறுதிக்கட்ட பிரச்சாரமாக திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின் இன்று வீதி வீதியாகச் சென்று ஆதரவு திரட்டவிருக்கிறார். காலை 9 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கும் அவர் மாலை வரை பிரச்சாரம் செய்யவுள்ளார். இதனிடையே, அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து நேற்று பிரச்சாரம் செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 2வது நாளாக இன்றும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.