Skip to main content

“போராடத் தயாராக இருக்கிறேன்” - வினேஷ் போகத் சூளுரை!

Published on 06/09/2024 | Edited on 06/09/2024
Vinesh Phogat speech I am ready to struggle 

ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் தான் ஒலிம்பிக் மல்யுத்த வீரர் வினேஷ் போகட் காங்கிரசில் இன்று (06.09.2024) இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தது. அண்மையில் ஒலிம்பிக் மல்யுத்த வீரர் வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியை சந்தித்திருந்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியில் இன்று முறைப்படி தங்களை இணைத்துக்கொண்டனர். மேலும் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் வினேஷ் போகட் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்புகளும் விரையில் வெளியாகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் பேசுகையில், “காங்கிரஸ் கட்சிக்கு இன்று முக்கியமான நாள் ஆகும். வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரை எங்கள் காங்கிரஸ் குடும்பத்திற்கு வரவேற்கிறோம். இது காங்கிரஸ் கட்சியினர் அனைவருக்கும் பெருமையான தருணம் ஆகும்” எனத் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் இணைந்த பிறகு பஜ்ரங் புனியா பேசுகையில், “அநீதிக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம். ஒவ்வொரு போராட்டத்திலும் காங்கிரசுடன் நிற்போம். பெண் மல்யுத்த வீரர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக பாஜகவின் பெண் எம்.பி.க்களுக்கு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால் அவர்கள் யாரும் எங்களுடன் துணை நிற்கவில்லை.ஆனால் காங்கிரஸ் எல்லா இடங்களிலும் எங்களுடன் துணை நின்றது” எனப் பேசினார்.

Vinesh Phogat speech I am ready to struggle 

மேலும் வினேஷ் போகத் பேசுகையில், “காங்கிரசுக்கு நான் மிகுந்த நன்றி கூறுகிறேன். ஏனென்றால் கஷ்ட காலங்களில் மட்டுமே நம்முடையவர் யார் என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். நாங்கள் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டபோது பாஜகவைத் தவிர அனைவரும் எங்களுடன் இருந்தார்கள். எங்கள் வலியையும் கண்ணீரையும் உங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நிற்கும் ஒரு சித்தாந்தத்துடன் நான் இணைந்திருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். மேலும் அவர்களின் உரிமைகளுக்காகத் தெருவில் இருந்து பாராளுமன்றம் வரை போராடத் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்