
மின்சார சட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய மின்சார சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான சட்டத் திருத்த முன்வரைவு தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய மின்சார சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
மத்திய மின்சார சட்டத்தின் 45-ஆவது பிரிவு மின்கட்டணத்தை வசூலிக்கும் அதிகாரத்தை மின்சார வாரியங்களுக்கு வழங்குகிறது. இச்சட்டத்தின் 65-ஆவது பிரிவு மின் கட்டணத்திற்கு மாநில அரசுகள் மானியம் வழங்குவதை முறைப்படுத்துகிறது. இந்த இரு பிரிவுகளிலும் மத்திய அரசு செய்யவுள்ள திருத்தங்களின் மூலம் மாநில அரசுகள் மின்சாரத்திற்கான மானியத்தை மின்சார வாரியங்களுக்கு வழங்குவது தடை செய்யப்படுகிறது. மாறாக, மாநில அரசுகள் பயனாளிகளுக்கே நேரடியாக மானியம் வழங்க வேண்டும் என்று மின்சார சட்டத்திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது.
மேலோட்டமாக பார்க்கும் போது இது சீர்திருத்தமாகத் தெரியும். ஆனால், தமிழ்நாடு, கேரளம் போன்ற மாநிலங்களில் விவசாயம் உள்ளிட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் நோக்கம் கொண்டதாகும். தமிழ்நாட்டில் இப்போது விவசாயத்திற்கு இலவசமாக மின்சாரம் வழங்கப் படுகிறது; நெசவாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இவை தவிர அனைத்து வீடுகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தத்தின் மூலம் விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தை மின்சார வாரியங்களுக்கு செலுத்த வேண்டும். அதன் பின்னர் அவர்களுக்கான மானியத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துமாம். இதைக் காரணமாக வைத்து விவசாயத்துக்கான அனைத்து மின் இணைப்புகளுக்கும் டிஜிடல் மீட்டர்கள் பொருத்தப்படும். இவை அனைத்துமே இலவச மின்சாரத்தை படிப்படியாக ரத்து செய்வதற்கான முன்னேற்பாடுகள் தான்.
இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்வதற்கான விதையை மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பே விதைத்து விட்டது. இறுதியாக கடந்த ஜூலை மாதம் வெளியிடபட்ட மாநில மின்வாரியங்களின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை மத்திய எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டது. அதில் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற யோசனை மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தைக் கண்டித்து கடந்த ஜூலை 8-ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில்,‘‘மத்திய அரசு அளித்துள்ள பரிந்துரைகளின் நோக்கம் என்னவென்றால், விவசாயத்துக்கு வழங்கப்படும் மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்துவதன் மூலம் ஒவ்வொரு விவசாயிக்கும் எவ்வளவு மின்சாரம் இலவசமாக வழங்கப் படுகிறது என்பதைக் கண்டறிவது, பின்னர் அதற்கு உச்சவரம்பு நிர்ணயிப்பது, ஒரு கட்டத்திற்கு பிறகு இலவச மின்சாரத்தை ரத்து செய்வது தான்’’ என்று கூறியிருந்தேன். இப்போது அது உண்மையாகிவிட்டது.
இதற்கெல்லாம் மேலாக இலவச மின்சாரத்தை அடுத்த 3 ஆண்டுகளில் நிறுத்த வேண்டும் என்பதற்கான மறைமுக அழுத்தத்தையும் மத்திய மின்சார சட்டத்திருத்தம் அளிக்கிறது. விவசாயத்துக்கு இலவசமாக மின்சாரம் வழங்குவதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்காக தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் முறையை அடுத்த 3 ஆண்டுகளில் படிப்படியாக கைவிட வேண்டும் என்றும் புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனால் மின்வாரியங்களின் வருவாய் கணிசமாக குறையும்; இலவச மின்சாரத்திற்காக அரசு வழங்க வேண்டிய மானியம் அதிகரிக்கும் என்பதால் ஒரு கட்டத்தில் இலவச மின்சாரத்தை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தமிழகம் போன்ற மாநிலங்கள் தள்ளப்படும். இது தான் மத்திய அரசின் விருப்பம். ஆனால், இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை நிறுத்துவதற்கு முயற்சிகள் நடந்த போதெல்லாம் அதற்கு எதிராக கடுமையான போராட்டங்கள் வெடித்துள்ளன. 1970, ஜூலை 10-ம் தேதி, விவசாய பம்புசெட்களுக்கான மின்கட்டணத்தில் ஒரு பைசாவை உயர்த்திய தி.மு.க. அரசைக் கண்டித்து மிகப்பெரிய போராட்டம் வெடித்தது.
ஒரு கட்டத்தில் போராட்டத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 உழவர்கள் கொல்லப்பட்டனர். அன்று தொடங்கி 1982 வரை பல்வேறு போராட்டங்களில் 58 விவசாயிகள் காவல்துறையினரால் கொல்லப்பட்டனர். 1973-ம் ஆண்டு நடந்த மாட்டுவண்டிப் போராட்டம் உலக அளவில் பேசப்பட்டது.
போராட்டத்தின் அழுத்தம் தாங்க முடியாமல் தான் 1989-ஆம் ஆண்டில் இலவச மின்திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது. ஒரு பைசா மின்கட்டண உயர்வுக்கே இந்த அளவுக்கு போராட்டம் என்றால், இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் எந்த அளவுக்கு உழவர்கள் போராட்டம் வெடிக்கும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
உழவர்கள் தான் உலகுக்கு சோறு படைக்கும் கடவுள்கள். அவர்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும், தொடர்ந்து தீமை இழைத்து அவர்களை உயிருடன் அழிக்கும் முயற்சிகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடக் கூடாது. உழவர்கள் நலனுக்கு எதிரான மத்திய மின்சார சட்டத் திருத்த முன்வரைவை மத்திய அரசு கைவிட வேண்டும்; இந்த கோரிக்கையை அனைத்து கட்சிகளும் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.