நேற்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் 'தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'பாஜகதான் தமிழகத்தில் எதிர்க்கட்சியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது' என கூறியுள்ளதுபற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த, எடப்பாடி பழனிசாமி,
''நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையேயான ஓட்டு வித்தியாசம் 3% தான். இதிலிருந்து உங்களுக்கு நன்றாகத் தெரியும் அதிக வாக்குகளைப் பெற்ற, அதிக சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்ற கட்சி அதிமுக. எனவே நாங்கள் தான் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி'' எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ''எல்லாரும் சொல்லலாம் பிரதான எதிர்க்கட்சி என்று. ஆனால் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள் பாஜகவை பெர்சப்ஷன் முறையில் எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அதேநேரத்தில் பாஜகவின் எண்ணம் பிரதான எதிர்க்கட்சியாக வருவதல்ல, ஆளுங்கட்சியாக வருவது. நெம்பர் த்ரீ பார்ட்டியாக வருவதற்கு கட்சி நடத்தவில்லை நெம்பர் ஒன் பார்ட்டியாக வருவதற்கு கட்சி நடத்துகிறோம். மூன்றாவது கட்சி யார் என்று சண்டை போட்டுக்கொள்ளட்டும். ஆனால் அந்த சண்டையில் நாங்கள் பங்குபெற விரும்பவில்லை. பாஜக திமுகவை எதிர்க்கிறது என்று சொல்கிறார்கள். அப்படி இல்லை திமுகதான் பாஜகவை எதிர்க்கிறது. அமைச்சர்கள் எல்லாம் பேசுகிற வார்த்தைகளை பாருங்க... சத்தியப்பிரமாணம் செய்து ஆட்சிக்கு வந்த அமைச்சர் 'வால நறுக்கி சுண்ணாம்பு வைப்பேன்' என்றெல்லாம் பேசுகிறார். 'தொண்டர்களை ஏவி விட்டு தொம்சம் பண்ணுவேன்' என்றெல்லாம் பேசுகிறார்கள். இதையெல்லாம் பார்க்கிற சாமானிய மக்கள் விரும்புவார்களா?'' என்றார்.