துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் சொந்த ஊரான பெரியகுளம் ஒன்றியத் தேர்தலில் மொத்தமுள்ள 16 இடங்களில் தி.மு.க. 8 இடங்களிலும், அ.தி.மு.க. 7 இடங்களிலும், அ.ம.மு.க. 1 இடத்திலும் வெற்றி பெற்றன. அ.ம.மு.க.வை சேர்ந்த மருதையம்மாளை அ.தி.மு.க.வில் சேர்க்க ஓ.பி.எஸ். முயற்சி செய்த நிலையில், தி.மு.க. முன்னாள் மாவட்டச் செயலாளர் மூக்கையா மருதையம்மாளுக்கு துணைத்தலைவர் பதவி கொடுப்பதாக பேசி தி.மு.க.வுக்கு ஒன்றியத் தலைவர் பதவியைத் தக்கவைத்தார்.
இதைப்போலவே, ஆண்டிப்பட்டி தொகுதியை தி.மு.க. கைப்பற்றிய நிலையில், அந்தத் தொகுதிக்கு உட்பட்ட கடமலைமயிலை ஒன்றியத் தலைவர் பதவிக்கும் தி.மு.க., அ.தி.மு.க. இடையே பலத்த போட்டி உருவாகி இருக்கிறது. அங்கு தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தலா 7 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால் கவுன்சிலர்களை விலைக்கு வாங்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளது. தி.மு.க. மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணனோ, ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜனோ கண்டு கொள்ளவில்லை என்பதே தி.மு.க.வினரின் கவலை.