முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் அலுவலகங்கள், பினாமிகளின் பங்களாக்கள் என அதிரடி ரெய்டுகளை நடத்தி முடித்திருக்கிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை. இந்தச் சோதனைகள் அதிமுகவில் மாஜி அமைச்சர்கள் 8 பேருக்கு ஏக கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் அடுத்த குறி நாம் தான் என யோசித்த மாஜி ராஜேந்திரபாலாஜி, டெல்லிக்கு அவசரம் அவசரமாகப் பறந்தார். அவர் டெல்லிக்கு விரைந்ததும், ‘ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும் லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டுகளிலிருந்து காப்பாற்றவும் டெல்லி எஜமானர்களின் உதவியை எதிர்பார்த்து பாஜகவில் இணையப் போகிறார்’ என்று தகவல்கள் ரெக்கை கட்டிப் பறந்தன.
ஓரிரு நாளில் சென்னை திரும்பிய அவர், எடப்பாடியையும் பன்னீரையும் சந்தித்து, டெல்லி சென்ற காரணத்தை விளக்கியிருக்கிறார். மேலும், அதிமுகவில் தான் இருக்கிறேன் என்பதையும் அதன் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் ராஜேந்திரபாலாஜி.
பாஜகவில் இணையப் போகிறார் என்ற செய்தி பரவிய நிலையில், உண்மையில் அவர் டெல்லி சென்றதன் நோக்கம் என்னவாக இருக்கும்? என்று டெல்லி சோர்ஸ்களின் விசாரித்த போது, ‘ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக அதிமுக ஆட்சியின் போதே தனி நபர் ஒருவர் தொடர்ந்த வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்த இந்த வழக்கில், இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தார்கள். மூன்றாவது நீதிபதியிடம் தற்போது வழக்கு நிலுவையில் இருக்கிறது.
இந்த நிலையில், அந்த வழக்கில் தனது சார்பில், சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரை நியமிக்க விரும்பியுள்ளார் ராஜேந்திரபாலாஜி. அதனைத் தொடர்ந்தே டெல்லிக்குச் சென்றார். மூத்த வழக்கறிஞரான முகுல் ரஹோத்தகியை சந்தித்துப் பேசியுள்ளார். வழக்கின் விபரங்கள் ரஹோத்தகியிடம் சொல்லப்பட்டுள்ளது. வழக்கின் தன்மையை ஆராய்ந்த ரஹோத்தகி, இதில் ஆஜாராவது குறித்து ஒரு வாரத்தில் தனது பதிலை சொல்வதாகத் தெரிவித்திருக்கிறார். ஆக, தனது வழக்குக்கு ஒரு நல்ல வக்கீலைத் தேடியே டெல்லிக்கு வந்து விட்டுச் சென்றார் ராஜேந்திரபாலாஜி’ என்கின்றனர்.
இந்த வழக்கில் ரஹோத்தகி ஆஜாரானால், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் இருக்கும் இதே ரீதியிலான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் அந்த வழக்கிலும் ரஹோத்தகி ஆஜராகலாம் என்கிற தகவலும் டெல்லியிலிருந்து கிடைக்கின்றன.