!["BJP is trying to create tension in Tamil Nadu" - Thirumavalavan](http://image.nakkheeran.in/cdn/farfuture/7u7yhZCLbXBh1FQnj4VEuEOizB9nuDZKaZfXomOpY18/1650453248/sites/default/files/inline-images/th_2087.jpg)
தமிழகத்தில் திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சித்து வருவதாக தொல். திருமாவளவன் சீர்காழியில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழக ஆளுநரின் கார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவது திசை திருப்பும் முயற்சி. பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்கள் திட்டமிட்டு ஒரு பதற்றத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். பாஜகவினர் வன்முறையை தூண்டுவதற்கு திட்டமிட்டு செயல்படுகின்றனர்.
அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படக்கூடிய அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் அதன் மூலமாக தமிழ்நாட்டில் வேர் ஊன்ற வேண்டும் என திட்டமிடுகின்றனர். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் தங்கள் கட்சியை சேர்ந்த அதிதீவிர மதவாத சக்திகளை ஆளுநராக நியமித்து வருகின்றனர். அவர்கள் மூலம் மத வெறுப்பை ஊக்கப்படுத்துவது, மத அடிப்படையிலான பிரிவினையை உறுதிப்படுத்துவதற்கு பாஜக அரசு முயல்கிறது.
இலங்கைக்கு இந்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் உதவிகளை செய்துள்ளது. அந்த உதவிகள் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழுமையாக கிடைப்பதை இந்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். கண்காணிக்க வேண்டும். இலங்கையில் தவிக்கும் தமிழர்கள் மற்றும் சிங்களர்களுக்கு தமிழக அரசின் சார்பில் உதவிகள் செய்வதற்கு தயாராக உள்ளது. அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.