ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் அனைத்துத் தரப்பினரும் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறார்கள். தமிழகத்தில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும், கடந்த 3 மாதங்களாக ஆட்டோ, கால் டாக்ஸி உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால், ஆட்டோ, கால் டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறார்கள்.
அவர்களுடைய வாழ்க்கையே மிகப்பெரிய கேள்விக் குறியாக மாறியிருக்கிறது. வாகன ஓட்டுநர் உரிமம், காப்பீடு மற்றும் தரச் சான்றிதழ் ஆகியவற்றைப் புதுப்பிக்க 10 ஆயிரம் ரூபாய் வரை தாங்கள் செலவு செய்வதாக ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
எனவே, ஆந்திராவில் 'வாகன மித்ரா' திட்டத்தின் மூலம் 10 ஆயிரம் ரூபாய் வழங்குவது சாத்தியமாகும் போது, தமிழகத்திலும் இதுபோன்ற ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து, நமது ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.