புதுச்சேரி சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று (18/01/2021) காலை 10.15 மணிக்கு தொடங்கவிருக்கிறது. இதில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்து நிறைவேற்றபட இருக்கிறது. அதேபோல் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கேரளா, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் புதுச்சேரி அரசும் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று தீர்மானம் நிறைவேற்றுவிருக்கிறது.
புதுச்சேரி அரசுக்கு அதிகாரம் இல்லாத காரணத்தினாலும், மானியமும் குறைவான அளவிலேயே கிடைக்கும் காரணத்தினால் புதுச்சேரி அரசுக்கு மாநில அந்தஸ்து தீர்மானம் நிறைவேற்றபட இருக்கிறது. இந்த கோரிக்கை ஏற்கனவே நான்கு முறை நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
30 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட புதுச்சேரியில், 14 காங்கிரஸ் உறுப்பினர்களையும், 3 தி.மு.க. உறுப்பினர்களையும் கொண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் தி.மு.க. அதிருப்தியில் இருப்பதால், மெஜாரிட்டியை சட்டமன்றத்தில் நிரூப்பிக்க வேண்டும் என்று நேற்றே அ.தி.மு.க. கூறியிருந்தது. இதனால், இந்த விவகாரத்தையும் அ.தி.மு.க.வினர் சட்டப்பேரவையில் முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் இன்று தி.மு.க.வின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறவிருப்பதால், அவர்கள் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் பங்கேற்பது கேள்விக்குறியாகவுள்ளது.
சமூகநலத்துறை சார்பாக இதுவரை 15 கோப்புகள் கொடுத்தும், ஆளுநர் கிரண்பேடி, அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை என கடந்த ஒன்பது நாட்களாக சமூகநலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி, சட்டமன்ற வாயிலின் முன்பாக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். முதல்வர் நாராயணசாமி அவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும், அவர் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அதனால், இந்தப் போராட்டத்திற்கும் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் முடிவு தெரியவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் முதல்வர் நாராயணசாமி சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.